Homeசெய்திகள்தமிழ்நாடுமே நாள்- ஆட்சியாளர்களின் உழைப்புச் சுரண்டலுக்கெதிராக ஒன்றுபடுவோம்: சீமான்

மே நாள்- ஆட்சியாளர்களின் உழைப்புச் சுரண்டலுக்கெதிராக ஒன்றுபடுவோம்: சீமான்

-

மே நாள்- ஆட்சியாளர்களின் உழைப்புச் சுரண்டலுக்கெதிராக ஒன்றுபடுவோம்: சீமான்

மே நாள் கொண்டாடப்பட்ட நூற்றாண்டு பெருநாளில் ஆட்சியாளர்களின் உழைப்புச் சுரண்டலுக்கெதிராக ஒன்றுபட்டு தொழிலாளர் உரிமைகளை வென்றெடுப்போம் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

சீமான்

இதுகுறித்து சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “18ஆம் நூற்றாண்டில் ஏற்பட்டத் தொழிற்புரட்சியின் காரணமாக எவ்வித விதிமுறைகளும், சட்டத்திட்டங்களும் இல்லாமல் இலாபம் சம்பாதிப்பதையே நோக்கமாகக் கொண்ட முதலாளிகளால் தொழிலாளர்கள் அடிமைகள் போல நடத்தப்பட்டனர். 1890ஆம் ஆண்டு அமெரிக்காவில் 8 மணி நேர வேலை, 8 மணி நேர உறக்கம், 8 மணி நேர ஓய்வு, என்கின்ற அடிப்படை உரிமைகளை நிறைவேற்றக் கோரியும், உழைப்புக்கேற்ற ஊதியம் என்பதை வலியுறுத்தியும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிறுவனங்களில் பணிபுரிந்த சுமார் 3 இலட்சத்து 50 ஆயிரம் தொழிலாளர்கள் வீதியில் இறங்கிப் போராடினார்கள். அவர்களின் போராட்டத்தை அப்போதைய அமெரிக்க வல்லாதிக்க அரசு அடக்கி ஒடுக்க நினைத்து ஏராளமானத் தொழிலாளர்களைக் கொன்று குவித்தது. அமெரிக்கத் தொழிலாளர்களை உள்ளடக்கியக் கூட்டமைப்பு இந்த அடக்குமுறைகளை எதிர்த்து மே 1, 1886 அன்று ஒரு பொது வேலை நிறுத்தத்திற்கு அறைகூவல் விடுத்தது. தொழிலாளர்களின் எழுச்சிமிகுந்தப் புரட்சிக்கு அடிபணிந்து வல்லாதிக்க அரசு இறுதியில் 8 மணி நேர வேலை, உழைப்புக்கேற்ற அடிப்படை ஊதியம் என்கின்ற கோரிக்கைகளுக்கு ஒத்துக்கொண்டது. அந்த வரலாற்று வெற்றியை நினைவுகூறும் வகையில் ஆண்டுதோறும் மே – 1 உழைப்பாளர் நாளாக உலகத்தொழிலாளர்களால் கொண்டாடப்படுகிறது.

இந்தியப் பெருநிலத்திலேயே தமிழரின் தாயகமான தமிழ்நாட்டில் சென்னை‌ கடற்கரையில் 1923 ஆம் ஆண்டு மே 1 அன்று பெரும்புகழ் கொண்ட நமது தாத்தா, தமிழ்த்தேசிய இனத்தின் பொதுவுடமை போராளி ஐயா சிங்காரவேலர் தலைமையில் உழைப்பாளர் நாள் முதன்முறையாக கொண்டாடப்பட்டது. அதனடிப்படையில் இந்தியப் பெருநிலம் எங்கும் மே 1 அன்று உழைப்பாளர்கள் நாள் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு மே நாள் கொண்டாடப்பட்டதன் நூற்றாண்டு நாள் என்பது கூடுதல் சிறப்பாகும். உரிமை பெற்ற நூற்றாண்டுத் திருநாளை கொண்டாடும் நாளிலும், உரிமைகளைப் பாதுகாக்க ஒன்றுகூடிப் போராட வேண்டிய கட்டாயச் சூழலில் தள்ளப்பட்டுள்ளோம் என்பதுதான் வேதனை நிறைந்த உண்மை.

சீமான் - என்.எல்.சி-க்கு துணைபோவதை திமுக அரசு கைவிட வேண்டும் - சீமான் வலியுறுத்தல்..

இந்தியாவை ஆளும் மோடி தலைமையிலான பாஜக அரசு கொண்டு வந்த தொழிலாளர் விரோத சட்டத்தொகுப்பினை அடிப்படையாக கொண்டு, தொழிலாளர் வேலை நேரத்தை 12 மணி நேரமாக அதிகரித்து சட்டத்திருத்தம் நிறைவேற்றியுள்ள திமுகவின் திராவிட அரசு கடும் எதிர்ப்பு எழுந்த பிறகும் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதே தவிர, இன்னும் முழுமையாக அதனைக் கைவிடவில்லை. தொழிலாளர்கள் 8 மணி நேர வேலை உரிமை பெற்ற மே நாள் கொண்டாடத் தொடங்கி நூற்றாண்டு கடந்த பிறகும் இன்றளவும் தொழிலாளர் உரிமைகள் பறிபோகும் பேராபத்தில் உள்ளது என்பதுதான் பெருங்கொடுமை.

”காலுக்குச் செருப்புமில்லை
கால் வயிற்றுக் கூழுமில்லை
பாழுக்கு உழைத்தோமடா – என் தோழனே
பசையற்றுப் போனோமடா”
எனப் பாடிய பொதுவுடைமைப் போராளி பெருந்தமிழர் நமது ஐயா ஜீவானந்தம் அவர்களின் பாடலைப்போல் எந்தக் காலத்திலும் யாராலும் ஏறெடுத்துப் பார்க்க கதியற்ற, எவராலும் திரும்பிப் பார்க்கப்படாத யாருமற்றவர்களாகவே தொழிலாளர்கள் இப்போதும் இருக்கிறார்கள். விவசாயம் தொடங்கி வாழ்வியலுக்கான அத்தனைப் பணிகளிலும் தங்களை உளப்பூர்வமாக அர்ப்பணித்துக்கொண்டு பணியாற்றும் உழைப்பாளர்களைச் சுரண்டி பன்னாட்டு பெருமுதலாளிகளுக்கு சேவை புரியும் தரகு நிறுவனங்களாகவே ஆளும் அரசுகள் செயல்படுகின்றன. அடக்குமுறைகள் மூலம் தொழிலாளர் உரிமைகளைத் தட்டிப்பறித்து முதலாளித்துவக் கைகூலிகளாக செயல்படும் அரசுகளுக்கு எதிராக, தங்களுக்குள் ஒற்றுமை பெருக்கி, தீயதை எதிர்த்து போராடும் துணிவும் – வலிமையும் பெற்ற பேராற்றலாகவும், முன்னேற்றப்பாதையில் நடைபோடும் பேராளுமையாகவும் தொழிலாளர் வர்க்கம் மேம்பட வேண்டும். ஆளும் அரசுகள் தொழிலாளர் உழைப்பினைச் சுரண்டி, உரிமைகளைப் பறிக்க முயன்றால், அத்தகைய கொடுங்கோன்மை அரசுகளைத் தூக்கி எறியவும் சிறிதும் அச்சமின்றி தொழிலாளர் வர்க்கம் துணை நிற்கவும் வேண்டும்.

ஆட்சி, அதிகாரத்தின் துணைகொண்டு உலகமயம், தாராளமயம் என முதலாளித்துவம் நம்மை அச்சுறுத்தும் அனைத்து அடக்குமுறைகளுக்கும் எதிராக உழைப்பாளர் உரிமைபெற்ற மே நாள் தமிழ் மண்ணில் கொண்டாடப்பட்ட நூற்றாண்டு பெருநாளில் ஆட்சியாளர்களின் உழைப்புச் சுரண்டலுக்கெதிராக நாம் அனைவரும் ஒன்றுபட்டு தொழிலாளர் உரிமைகளை வென்றெடுக்க உறுதியேற்போம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

MUST READ