நாகையிலிருந்து இலங்கைக்கு வரும் 16ம் தேதி முதல் மீண்டும் கப்பல் சேவை துவங்கவுள்ள நிலையில், கப்பலில் பயணம் செய்வதற்கான முன்பதிவு இன்று நள்ளிரவு தொடங்குகிறது
நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன்துறை வரையிலான பயணிகள் கப்பல் போக்குவரத்து வரும் 16ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்க உள்ளது.
இதற்காக அந்தமானில் இருந்து சிவகங்கை என பெயரிட்ட கப்பல் கடந்த 6ஆம் தேதி நாகை துறைமுகத்திற்கு வரவழைக்கப்பட்டு, கடந்த 10ம் தேதி சோதனை ஓட்டம் நடைபெற்றது.
நாகை துறைமுகத்தில் இருந்து காலை 9 மணிக்கு புறப்படும் கப்பல் பகல் 12 மணிக்கு காங்கேசன் துறையை சென்றடையும். மறுமார்க்கத்தில் பிற்பகல் 3 மணிக்கு இலங்கையில் இருந்து புறப்பட்டு 6 மணிக்கு நாகை துறைமுகம் வந்தடையும்.
இந்த கப்பலில் சாதாரண வகுப்பில் ஒரு நபருக்கு ரூ.5 ஆயிரம் கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பிரீமியம் வகுப்பில் ஒரு நபருக்கு ரூ.7,500 கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. உணவக வசதியுடன், ஒரு நபர் 60 கிலோ வரை பார்சல் எடுத்து செல்லவும், 5 கிலோ வரை கையில் பார்சல் எடுத்து செல்லவும் அனுதிக்கப்பட்டுள்ளது.
கப்பலில் வரும் 16ம் தேதி பயணம் செய்வதற்கான டிக்கெட் முன்பதிவு இன்று நள்ளிரவு தொடங்க உள்ளதாக தனியார் கப்பல் நிர்வாகம் தெரிவித்துள்ளது. www.sailindsri.com என்ற இணையதளம் மூலம் பயணிகள் டிக்கெட்டை முன்பதிவு செய்யலாம் என்றும் தெரிவித்துள்ளது.