spot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுதன்னுடைய உண்மையான உழைப்பால் உயர்ந்தவர் நல்லகண்ணு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

தன்னுடைய உண்மையான உழைப்பால் உயர்ந்தவர் நல்லகண்ணு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

-

- Advertisement -
kadalkanni

நாட்டுக்கு எதிராகச் சதி செய்தார் என்று குற்றம்சாட்டி 7 ஆண்டுகள் சிறை வைத்த காலம் மாறி – உயர்நீதிமன்றமே பாராட்டும் அளவிற்கு தன்னுடைய உண்மையான உழைப்பால் உயர்ந்தவர் நல்லகண்ணு என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணுவின் நூற்றாண்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று,  நல்லகண்ணுவின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் சிறப்பு பாடல் வெளியிட்டார். மேலும், கவிதை நூலை வெளியிட்டும், பாராட்டுரை ஆற்றினார். அப்போது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

வாழ்த்துவதற்காக நாங்கள் வந்துவிடவில்லை; வாழ்த்து பெறுவதற்காக நாங்கள் இங்கு வந்திருக்கிறோம்.  சமத்துவச் சமுதாயத்தை அமைப்பதற்கான நம்முடைய பணியில் வெல்வதற்காக அய்யா வாழ்த்துங்கள் என்று கேட்க வந்திருக்கிறோம்! உங்கள் வாழ்த்தைவிட எங்களுக்குப் பெரிய ஊக்கம் எதுவும் கிடைத்துவிட போவதுமில்லை. தந்தை பெரியாருக்கும், கலைஞருக்கும் கிடைக்காத வாய்ப்பு நல்லகண்ணுவுக்கு கிடைத்திருக்கிறது! 100 வயதைக் கடந்து நமக்கு வழிகாட்டியும், தமிழ்ச் சமுதாயத்துக்காக இன்னும் உழைக்கத் தயாராக இருக்கிறேன் என்றும், உள்ள உறுதியோடு இங்கே அமர்ந்திருக்கக்கூடிய நம்முடைய அய்யாவுக்கு கம்பீரமான வணக்கத்தை நான் தெரிவித்துக் கொள்கிறேன். கம்பீரமான வணக்கம் மட்டுமல்ல, கம்பீரமான செவ்வணக்கத்தையும் நான் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த விழாவை பார்க்கிறீர்கள், பொதுவுடைமை இயக்கம் – திராவிட இயக்கம் – தமிழ்தேசிய இயக்கம் ஆகியவற்றுடன் சங்கமமாக இந்த நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில், புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் பாடல்தான் என்னுடைய நினைவிற்கு வருகிறது! “எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார் – இங்குள்ள தமிழர் ஒன்றாதல் கண்டே” எல்லோரையும் ஒன்றாக்கியிருப்பது, தோழர் நல்லகண்ணுவின் தியாகம்! அவருடைய தொண்டு! அவருடைய போராட்ட வாழ்க்கை!

இந்த நேரத்தில், நம்முடைய அய்யா நல்லகண்ணுவின் 80-ஆவது பிறந்த நாள் விழாவை நான் நினைத்து பார்க்கிறேன். அந்த விழாவை மறைந்த தா.பாண்டியன் தான் முன்னின்று நடத்திய விழா அது! நம்முடைய முத்தரசன், ராஜா போன்றவர்களுக்கெல்லாம் நினைவிருக்கிறது என்று நான் கருதுகிறேன். அந்த விழாவில் கலைஞர் பங்கெடுத்துக் கொண்டு நல்லகண்ணுவை வாழ்த்தினார். தலைவர் கலைஞரைவிட அய்யா நல்லகண்ணு ஒரு வயதுதான் இளையவர். அதை குறிப்பிட்டு பேசிய தலைவர் கலைஞர், என்ன சொன்னார் தெரியுமா? “வயதால் எனக்குத் தம்பி; அனுபவத்தால் எனக்கு அண்ணன்”, “என்னைவிட வயதால் இளையவர், ஆனால், அனுபவத்தாலும், தியாகத்தாலும் நம்மையெல்லாம் விட மூத்தவர்” என்று குறிப்பிட்டார்.

அதுமட்டுமல்ல, “நல்லகண்ணு வாழும் காலத்தில் நாம் வாழ்கிறோமே அதுதான் பெருமை” இதைவிட பெரிய பாராட்டு வேறு எதுவும் இருக்க போவதில்லை. ஆனால், இதற்கும் முத்தாய்ப்பாக ஒன்றைச் சொன்னார்… ஒரு கார் விபத்து தலைவர் கலைஞருக்கு ஏற்பட்டது. அந்த ஆரம்ப காலத்தில் ஏற்பட்ட விபத்து ஒன்றில், தலைவர் அவர்களுடைய கண் ஒன்று பழுதுபட்டது. அது அனைவருக்கும் தெரியும்… அதை குறிப்பிட்டு, “எனக்கு ஒரு கண்தான் முகத்தில் இருக்கிறது. இன்னொன்று அகத்திலே இருக்கிறது. அதுதான் நல்லக் கண்” என்று குறிப்பிட்டார். அந்தளவுக்கு தோழர் நல்லகண்ணுவை மதித்தார்; தோழமை உணர்வோடு பாராட்டினார் தலைவர் கலைஞர்!

அந்த தோழமைக்கு சில எடுத்துக்காட்டுகளைச் சொல்ல வேண்டும் என்றால், 2001-இல் நடைபெற்ற அ.தி.மு.க. ஆட்சியில் தலைவர் கலைஞர் அவர்கள் அராஜகமாக கைது செய்யப்பட்டதும் அனைவருக்கும் நினைவு இருக்கும்.. விளக்கமாக சொல்ல விரும்பவில்லை. அப்போது அந்தக் கைதை கண்டித்து முதன்முதலாக அறிக்கை வெளியிட்டவர் யார் தெரியுமா? நம்முடைய தோழர் நல்லகண்ணு அவர்கள்தான்! இத்தனைக்கும் அப்போது இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் அ.தி.மு.க.வின் கூட்டணியில் இருந்தார்கள். அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் அந்த அராஜகத்தை தோழர் நல்லகண்ணு கண்டித்தார். கலைஞர் தாய் காவியம் தீட்டியபோது, அதற்கு தோழர் நல்லகண்ணுவிடம்தான் அணிந்துரை வாங்கினார்.
அப்படிப்பட்ட தோழமையை இறுதி வரை அதைப் பேணிப் பாதுகாத்தார் கலைஞர். அந்த நட்புணர்வுடன் தான், கொள்கை உறவோடு தான் இன்றைக்கு நான் உங்களை வாழ்த்தவும் – வாழ்த்துப் பெறவும் நான் வந்திருக்கிறேன்!

தோழர் நல்லகண்ணுவுக்கு, அண்ணல் அம்பேத்கர் விருது வழங்கினார் தலைவர் கலைஞர். நான் 2022-இல் தகைசால் தமிழர் விருதை வழங்கினேன், இதுதான் எனக்கு கிடைத்த பெருமை! அண்ணல் அம்பேத்கர் விருதை பெறும்போது, தமிழ்நாடு அரசு சார்பில் ஒரு லட்சம் ரூபாய் அய்யாவுக்கு கொடுக்கப்பட்டது. அதில் ஐம்பதாயிரத்தை, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிக்கும், இன்னொரு ஐம்பதாயிரத்தை விவசாய சங்கத்திற்கும் கொடுத்துவிட்டார் தோழர் நல்லகண்ணு! இப்போது, நம்முடைய ஆட்சி வந்த பிறகு என்னுடைய திருக்கரத்தால், தகைசால் தமிழர் விருது கொடுத்தபோது, அப்போது 10 லட்சம் ரூபாயை தந்தோம். அந்த 10 இலட்ச ரூபாயை மட்டுமல்ல, அதனுடன் 5 ஆயிரம் ரூபாயைச் சேர்த்து,10 லட்சத்து 5 ஆயிரம் ரூபாயை தமிழ்நாடு அரசுக்கே நிவாரண நிதியாக அளித்தவர்தான் நல்லகண்ணு. அவரின் 80-ஆவது பிறந்தநாளின்போது, அன்றைய இந்தியக் கம்யூனிஸ்ட் செயலாளர் தா.பாண்டியன், பொருளாளர் எம்.எஸ்.தாவீத், ஒரு கோடி ரூபாயைத் திரட்டித் தந்தார்கள். அந்த ஒரு கோடி ரூபாயையும் மேடையிலேயே இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கே கொடுத்துவிட்டவர் தான் நல்லகண்ணு.

அதே மேடையில், தமிழ்ச் சான்றோர் பேரவை அருணாசலம், கவிஞர் இளவேனில் இணைந்து எடுத்த முயற்சியின் காரணமாக, கார் ஒன்றை வாங்கி, தலைவர் கலைஞர் மூலமாக சாவியை ஒப்படைத்தார்கள். அந்தக் காரையும் இயக்கத்திற்காக கொடுத்துவிட்டார். இவ்வாறு, இயக்கம் வேறு, தான் வேறு என்று நினைக்காமல், இயக்கத்திற்காகவே, இயக்கமாவே வாழ்ந்துகொண்டு இருக்கக்கூடிய மாமனிதரை நினைத்து பெருமிதம் கொள்ளாமல் இருக்க முடியுமா? கட்சிக்காகவே உழைத்தார்! உழைப்பால் வந்த பணத்தையெல்லாம் கட்சிக்காகவே கொடுத்தார். அதனால்தான் வரலாற்றில் இன்றைக்கு உயர்ந்து நிற்கிறார்!

தாமிரபரணியைக் காக்க அவர் நடத்திய போராட்டம் பற்றி அனைவருக்கும் தெரியும்! அப்போது சென்னை உயர்நீதிமன்றம் என்ன சொல்லியது தெரியுமா? “நமக்கெல்லாம் தனிப்பட்ட வேலை என்பது வீட்டு வேலையாக அமைகிறது. ஆனால், இந்த மனிதருக்கு எந்த நேரமும் பொதுமக்களைப் பற்றிய சிந்தனையும், அவர்களுக்காக உழைப்பதைத் தவிர வேறு வேலையே இல்லை” என்று சென்னை உயர்நீதிமன்றமே பாராட்டியது! எப்படிப்பட்ட பயணம் இது…? நாட்டுக்கு எதிராகச் சதி செய்தார் என்று குற்றம்சாட்டி ஏழு ஆண்டுகள் சிறை வைத்த காலம் மாறி – உயர்நீதிமன்றமே பாராட்டும் அளவிற்கு தன்னுடைய உண்மையான உழைப்பால் உயர்ந்தவர் நல்லகண்ணு.

திராவிட இயக்கத்திற்கும், பொதுவுடமை இயக்கத்திற்குமான அரசியல் நட்பு இடையிடையே விடுபட்டிருக்கலாம். ஆனால், கொள்கை நட்பு என்பது எப்போதும் எந்த சூழ்நிலையிலும் தொடரும். அது தொடரக்கூடியது. மார்க்ஸ் – எங்கெல்ஸ் இணைந்து எழுதிய கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை முதலில் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டவர் தந்தை பெரியார்! சுயமரியாதை இயக்கத்தை தொடங்கியபோது, தந்தை பெரியாருக்குத் தோள் கொடுத்தவர் சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர்! இதே சுயமரியாதை இயக்கத்தில் வளர்ந்த தோழர் ஜீவா அவர்கள்தான், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாபெரும் தலைவராக உயர்ந்து, அந்த இயக்கத்தை வளர்த்தெடுத்தார்.

“திராவிட இயக்கம் உருவாகாமல் இருந்தால், நானே கம்யூனிஸ்ட் கட்சியில்தான் இருந்திருப்பேன்” என்று சொன்னவர் தலைவர் கலைஞர்! இவ்வளவையும் சொல்லும் என்னுடைய பெயரே, ஸ்டாலின்தான். இரண்டு இயக்கங்களுக்குமான நட்பு என்பது, கொள்கை நட்பு! தேர்தல் அரசியலைத் தாண்டியது இந்த நட்பு! சாதியவாதம், வகுப்புவாதம், பெரும்பான்மைவாதம், எதேச்சாதிகாரம், மேலாதிக்கம் ஆகிய அனைத்திற்கும் எதிராக, ஜனநாயகச் சக்திகள் ஒற்றுமையுடன் பணியாற்றுவதுதான் நல்லகண்ணுவுக்கு நாம் வழங்கும் நூற்றாண்டு விழா பரிசாக அமைந்திட முடியும்!
அத்தகைய ஒற்றுமையையும், ஒரே சிந்தனையும் கொண்டு, தோழர் நல்லகண்ணு அவர்களின் வழித்தடத்தில் நாமும் நடப்போம். நூற்றாண்டு கண்டுவிட்ட தோழர் நல்லகண்ணு  இன்னும் பல்லாண்டுகள் வாழ்க! வாழ்க! எங்களை வழிநடத்துக! என்று கேட்டுக்கொள்கிறேன், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ