போலி இறப்பு சான்றிதழ்! பத்திரப்பதிவில் தில்லாலங்கடி!! வசமாக சிக்கிய எம்.எல்.ஏ மகன்
ஸ்ரீநயினார் பாலாஜி மோசடியாகப் பத்திரப்பதிவு செய்துள்ளதாக அறப்போர் இயக்கம் குற்றம் சாட்டியிருந்த நிலையில், மண்டல துணை பத்திரப்பதிவு துறைத் தலைவர் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
மதுரையை சேர்ந்த இளையராஜா என்பவர் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நிலத்தை மோசடி செய்த பின் நயினார் நாகேந்திரனின் மகன் ஸ்ரீ நயினார் பாலாஜியுடன் இணைந்து மிகப்பெரிய பத்திரப்பதிவு மோசடி ஒன்றை செய்யும் வேலையில் களமிறங்குகிறார்.
சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள 1.3 ஏக்கர் நிலம் பல சர்ச்சைக்குள் சிக்கி உள்ளது. பலர் இது எங்களுடையது என்று அதற்கு உரிமை கோருகின்றனர். 2006 ஆம் ஆண்டு சரஸ்வதி என்றவருடைய பெயரில் பட்டா உள்ளது என்றும் அவர் விருகம்பாக்கம் சார்பதிவாளர் அலுவலகத்தில் சுந்தரமகாலிங்கம், வசந்தா என்றவருக்கு விற்றுள்ளார். பின்னர் சுந்தரமகாலிங்கம், வசந்தா ஆகியவர்களின் பெயரில் இந்த நிலத்திற்கான பட்டா மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இதன் பின்னர் 2008 ஆம் ஆண்டு கௌரி அம்மாள் மற்றும் சிலர் இதே நிலத்தில் பாகபிரிவினை பத்திரத்தை பதிவு செய்கிறார்கள். இதை எதிர்த்து சுந்தரமகாலிங்கம், வசந்தா சிட்டி சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து தற்போது வரை இந்த வழக்கு நடந்து கொண்டு இருக்கிறது.
இந்த 1.3 ஏக்கர் நிலத்தை மோசடியாக பதிய, சம்பந்தமே இல்லாத திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரத்தில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நிலத்தை அபகரித்த இளையராஜாவும், பாஜக சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரனின் மகன் ஸ்ரீ நயினார் பாலாஜி ஆகிய இருவரும் இணைந்து ஒரு மோசடி ஒப்பந்தத்தை கடந்த 2022 ஆம் வருடம் ஜூலை 23 ஆம் பதிவு செய்கின்றனர். நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே உள்ள உதயத்தூர் கிராமத்தில் உள்ள ஒரு சில சொத்துக்களையும் , சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள சொத்துக்களையும் சேர்த்து போலியான முறையில் பத்திப்பதிவுவை அப்போது ராதாபுரம் சார்பதிவாளராக இருந்த சரவணமாரியப்பன் பதிவு செய்துள்ளார்.
சென்னை மெட்ரோ ரயில் இந்த நிலத்தை கையகப்படுத்த உள்ளது என்பதையும் கணக்கில் அவர் கொள்ளவில்லை. மேலும் இந்த ஒப்பந்தத்தில் நயினார் பாலாஜி 46 கோடி ரூபாய்க்கு இந்த நிலத்தை வாங்க சம்மதம் என்று முன் பணமாக 2.50 கோடி கொடுத்துள்ளார். மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நிலத்தை மோசடி பதிவு செய்த இளையராஜா, நான் தான் இந்த நிலத்திற்கு பொது அதிகாரம் பெற்ற ஏஜெண்ட் என்றும், இந்த நிலம் குலாப்தாஸ்நாராயண் தாஸ் என்பவரின் பேரன் ஜெயந்திர ஓராவுக்கு சொந்தமானது என்றும் கூறி இந்த 1.3 ஏக்கர் நிலத்தை திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரத்தில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் பாஜக சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் அவருடைய மகன் நயினார் பாலாஜி ஆகிய இருவரும் இணைந்து மோசடியாக ஒப்பந்த பத்திரப்பதிவு செய்துள்ளனர்.
இதனையடுத்து அறப்போர் இயக்கம் மோசடியாக பத்திரப்பதிவு செய்துள்ளதாக கூறி இந்த விஷயத்தை வெளி கொண்டு வந்தது. இதனையடுத்து நெல்லை பத்திரிக்கையாளர் மன்றத்தில் கடந்த வருடம் நயினார் நாகேந்திரனின் மகன் ஸ்ரீ நயினார் பாலாஜி இது குறித்து செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது எந்தவித முறைகேட்டிலும் தான் ஈடுபட்டு பத்திரப்பதிவு செய்யவில்லை என்றும், என் மீது அவதூறு தெரிவித்த அறப்போர் இயக்கத்தின் மீது வழக்கு தொடர போகிறேன் என்றும் தெரிவித்தார்.
முக்கியமாக இதில் குலாப்தாஸ் நாராயணதாஸ் 1946-இல் மகாராஷ்டிராவில் இறந்ததாக ஒரு இறப்பு சான்றிதழை இளையராஜா வைத்துள்ளார், ஆனால் மற்றொரு புறம் இவர் 1944 இல் சென்னையில் இறந்ததாக வேறு ஒரு இறப்பு சான்றிதழும் சென்னை மாநகராட்சி இணையதளத்தில் உள்ளது. இந்த சம்பவத்தை அடுத்து ஸ்ரீ நயினார் பாலாஜி, மற்றும் இளையராஜா ஆகியோர் மோசடி செய்தது தெளிவாகி உள்ளது. நயினார் நாகேந்திரனின் மகன் ஸ்ரீ நயினார் பாலாஜி பாரதிய ஜனதா மாநில இளைஞரணி துணை தலைவராக இருந்து வருகிறார். இந்த மோசடியில் ஈடுபட்ட இளையராஜா, நயினார் பாலாஜி மற்றும் அதிகாரிகள் மீதும் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க அறப்போர் இயக்கம் கோரிக்கை உள்ளது. இதையடுத்து அந்த பத்திரப்பதிவை ரத்து செய்து மண்டல துணை பத்திரப்பதிவு துறைத் தலைவர் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.