திருநெல்வேலியில் உதயமானது ‘நெல்லை கண்ணன்’ சாலை
திருநெல்வேலி ஆர்ச் அருகில் உள்ள சாலைக்கு நெல்லை கண்ணன் பெயர் சூட்டி அதற்கான பலகை வைக்கப்பட்டது.
நெல்லை டவுனைச் சேர்ந்தவர் நெல்லை கண்ணன். பட்டிமன்ற பேச்சாளர், சொற்பொழிவாளர், இலக்கியவாதி, அரசியல் பேச்சாளர் என நெல்லை கண்ணன் பன்முக திறமை கொண்டிருந்தார். இவர் தனது மேடைப்பேச்சுகளில் அதிரடியாக பேசி பல சர்ச்சைகளில் சிக்கியவர்.
குறிப்பாக பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர் அமித்ஷா குறித்து பொது மேடையில் அவதூறு பேசியதாக கூறி நெல்லை கண்ணன் கைது செய்யப்பட்டிருந்தார். மேலும் நெல்லை உள்ளூர் வழக்காடு மொழியில் பேசும் இவரது பேச்சு பலரும் ரசிக்கும் வகையில் இருக்கும். காமராஜர் மீது அதிக பற்றும், பாசமும் கொண்டவர். எனவே அனைத்து மேடைகளிலும் காமராஜரை பற்றி பெருமையாக பேசுவார்.
குறுக்குத்துறை ரகசியங்கள், வடிவுடை காந்திமதியே போன்ற நூல்களை எழுதியுள்ளார். குறிப்பாக இவர் எழுதிய குறுக்குத்துறை ரகசியங்கள் என்ற நூல் மிகவும் பிரபலமானது. நெல்லை கண்ணன் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். இந்த நிலையில் உயிரிழந்த நெல்லை கண்ணனின் நினைவாக நெல்லை டவுன் ஆர்ச்சில் இருந்து குறுக்குத்துறை சாலையில் இணையும் தென் வடல் சாலைக்கு நெல்லை கண்ணனின் பெயரை சூட்ட நெல்லை மாநகராட்சி முடிவு செய்தது. இதுகுறித்து கடந்த 27 ஆம் தேதி நடைபெற்ற நெல்லை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற இருந்தனர். இதையடுத்து அச்சாலையில் நெல்லை கண்ணன் பெயர் பலகை வைக்கப்பட்டு, இன்று நெல்லை மாநகராட்சி மேயர் அதை திறந்து வைத்தார்.