நெல்லை மாவட்டம் அம்பை அருகே தட்டான்பட்டி என்ற கிராமத்தை சேர்ந்த மக்கள் விமானத்தில் பறந்து தங்களது 10 ஆண்டு கால ஆசையை நிறைவேற்றியுள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டம் அம்பை அருகே தட்டான்பட்டி என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த மக்கள் பெரும்பாலும் விவசாயத்திலும், பீடி சுற்றும் தொழிலிலும் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல் இளைஞர்கள் சிலர் காவல்துறையிலும், ராணுவத்திலும் பணியாற்றி வருகின்றனர். அவ்வாறு ராணுவத்தில் பணியாற்றி வரும் இளைஞர்கள் அவ்வபோது விமானத்தில் தங்களது சொந்து ஊருக்கு வருகை தருவது வழக்கம். இதனை பார்த்த அப்பகுதி மக்கள் தாங்களும் விமானத்தில் செல்ல வேண்டும் என ஆசைப்பட்டுள்ளனர்.
ஆனால் விமானத்தில் செல்ல அதிக தொகை வேண்டும் என்பதால் உடனடியாக அவர்களால் அந்த ஆசையை நிறைவேற்ற முடியவில்லை. இருப்பினும் விமானத்தில் செல்ல தேவையான பணத்தை சிறுக சிறுக சேமிக்க தொடங்கியுள்ளனர். தற்போது விமானத்தில் செல்வதற்கு தேவையான பணத்தை சேமித்து முடித்த பின்னர் அவர்கள் விமானத்தில் செல்ல திட்டமிட்டுள்ளனர். அதன்படி அவர்கள் இரண்டு நாட்கள் புனித சுற்றுலாவாக கோவாவிற்கு விமானத்தில் சென்றுள்ளனர். இரண்டு நாட்கள் அவர்கள் கோவாவில் தங்கியிருந்து மீண்டும் சொந்த ஊர் திரும்பவுள்ளனர்.