சென்னை கொரட்டூர் பகுதியில் உள்ள குறும்பட இயக்குனர் வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
ஆந்திர மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்டவர் முகில் சந்திரா. இவர் குறும்பட இயக்குனராவார். கொரட்டூர் கெனால் ரோடு பகுதியில் பிரபல அடுக்குமாடி குடியிருப்பில் இவர் வசித்து வருகிறார். இந்த நிலையில், இன்று அதிகாலை முதல் முகில் சந்திராவின் வீட்டில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
மாவோயிஸ்டுகள் மற்றும் நக்சலைட்களுடன் தொடர்பில் இருப்பதாக கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் முகில் சந்திராவின் வீட்டில் என் ஐ ஏ அதிகாரிகள் சோதனை செய்து வருவதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஆந்திராவில் மாவோயிஸ்டுகள் வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது முகில் சந்திரா மாவோயிஸ்டுகளை வைத்து ஒரு சில குறும்படங்களை இயக்கியதற்கான ஆதாரங்கள் கிடைத்ததாக கூறப்பட்டது. இது குறித்த தகவல்கள் வெளியாகி அப்போதே பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் தற்போது கொரட்டூரில் அமைந்துள்ள முகில் சந்திராவின் வீட்டில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.