அதிமுக மாநாடு நடத்த தடையில்லை – உயர்நீதிமன்ற கிளை
அதிமுக சார்பில் மதுரையில் நடைபெற உள்ள வீர எழுச்சி மாநாட்டிற்கு தடை கோரி தொடரப்பட்ட வழக்கை மதுரை உயர்நீதிமன்ற கிளை தள்ளுபடி செய்தது.
தமிழக அரசியலில் நீண்ட இடைவேளைக்கு பின்னர் அதிமுகவின் மாநாடு மதுரையில் வரும் ஆகஸ்ட் மாதம் 20ம் தேதி நடைபெற உள்ளது. இம்மாநாட்டில் நாங்கள் யார் என்பதை நிருபிப்போம் என்று எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் சூளூரை ஏற்று பணியாற்றி வருகின்றனர்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் அதிமுகவில் ஈபிஎஸ் – ஓபிஎஸ் இடையில் தலைமை பதவிக்கான கடும் போட்டி நிலவி வந்தது. தேர்தல் ஆணையமும், உயர்நீதிமன்றமும் அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை ஏற்றுக்கொண்டது. ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற உள்ள முதல் மாநாடு என்பதால் அதிமுக தொண்டர்கள் மத்தியில் கூடுதல் சிறப்பை பெற்றுள்ளது.
இந்நிலையில் மதுரையில் அதிமுக மாநாடு நடத்த தடை கோரிய மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. நான்கு மாதத்திற்கு முன் மாநாடு நடத்துவதாக அறிவித்துள்ளனர், கடைசி நேரத்தில் தடை கூறினால் எவ்வாறு முடியும் என தெரிவித்த நீதிமன்றம், காரைக்குடியைச் சேர்ந்த சேதுமுத்துராமலிங்கம், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது. நீதிமன்றத்தில் மாநாட்டில் வெடிபொருட்களோ பட்டாசுகளோ வெடிக்க மாட்டோம் என அதிமுக உறுதியானதை அடுத்து இந்த வழக்கு முடித்துவைக்கப்பட்டது.