நாளை முதல் பால் நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும், ஆவின் நிறுவனத்திற்கு பால் வழங்கப்படாது என்றும் பால் உற்பத்தியாளர் நலச் சங்கத்தின் மாநில தலைவர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச் சங்கத்தின் மாநில தலைவர் ராஜேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், பால்வளத்துறை அமைச்சர் நாசருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை என்றும், நாளை திட்டமிட்டப்படி பால் நிறுத்தப்போராட்டம் நடைப்பெறும் எனவும் கூறினார்.
மேலும், தனியார் பால் நிறுவனம் லிட்டருக்கு ரூ.10 கூடுதலாக அளித்து வாங்கி கொள்வதாக கூறிய அவர், தனியாருக்கு நிகராக அரசு வழங்க வேண்டும் என்றும், நாளை முதல் ஆவினுக்கு பால் அளிக்காமல், தனியாருக்கு கொடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார் பால் உற்பத்தியாளர் நலச் சங்கத்தின் மாநில தலைவர் ராஜேந்திரன்.
மேலும், அவர் கூறுகையில் பசும் பாலிற்கு 35 ரூபாய்யில் இருந்து 42 ரூபாயாகவும், எருமை பால் ரூ.44ல் இருந்து 51 ரூபாயாகவும் உயர்த்தி வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்திருப்பதாக கூறிய அவர், அரசு அழைத்து பேசி தீர்வு காணும் வரை திட்டமிட்டப்படி போராட்டம் தொடரும் என்றும் கூறினார்.
ஆவின் நிறுவனத்திற்கு பால் கொடுப்பதை நிறுத்திவிடுவோம் என்றும், நாளை முதல் பால் கொள் முதல் பணிகள் படிப்படியாக முற்றிலும் தடைபடும் என்றும் குறிப்பிட்டார் என்றும் அவர் கூறினார்.