தமிழகத்தில் பால் தட்டுப்பாடு இல்லை – அமைச்சர் நாசர்
பால் உற்பத்தியாளர்கள் சங்கம் போராட்டத்தினால் தமிழகத்தில் ஆவின் பால் தட்டுப்பாடு இல்லை அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் அருகே காக்கலூரில் நடைபெற்ற நூலக அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்ற பின் அமைச்சர் நாசர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் தமிழகம் முழுவதும் ஆவினில் 9354 பால் உற்பத்தியாளர்கள் சங்கம் பதிவு செய்யப்பட்டு இயங்கி வருகிறது.
அதில் ஈரோட்டை சேர்ந்த ஒரே ஒரு சங்கம் மட்டும் நேற்று தன்னை சந்தித்து பால் கொள்முதல் விலையை உயர்த்தி தர வேண்டுமென கோரிக்கை வைத்தனர்.
கடந்த இரண்டு மாதத்துக்கு முன்பு தான் உற்பத்தி விலையை மூன்று ரூபாய் உயர்த்தி கொடுத்து இருப்பதாக கூறினார்.
குறிப்பிட்ட சங்கத்தினர் மீண்டும் பால் கொள்முதல் விலை உயர்த்தி தர அவர்கள் கோரிக்கை வைத்திருப்பதாக கூறிய அமைச்சர் அவர்களின் கோரிக்கையை முதலமைச்சருடன் எடுத்துக் கூறி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
ஒரே ஒரு சங்கம் மட்டும் ஆவின் நிறுவனத்திற்கு பால் அனுப்ப மாட்டோம் என தெரிவித்திருக்கிறது. அவர்களின் போராட்டத்தால் ஆவினுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்றார்.
ஆவினுக்கு பால் வரத்து தொடர்ந்து வந்து கொண்டு இருப்பதாக கூறிய அமைச்சர், நாள் ஒன்றுக்கு 60 லட்சம் பால் பாக்கெட்கள் சீரான முறையில் தமிழகம் முழுவதும் விநியோகம் செய்யப்பட்டு வருவதாக கூறினார்.