ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் ஏற முயன்றபோது தவறி விழுந்து நடைமேடைக்கு இடையே சிக்கிக்கொண்ட வடமாநில நபரை ரயில்வே போலீசார் துரிதமாக செயல்பட்டு மீட்டுள்ளனர்.
பெங்களுருவில் இருந்து பாட்னா செல்லும் சங்கமித்ரா விரைவு ரயில் நேற்று திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் பயணிகளை இறக்கிவிட்டு புறப்பட்டது. அப்போது, மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த உப்லவ் மேத்தா (45) என்ற பயணி ஓடும் ரயிலில் ஏற முயன்றார். அப்போது, எதிர்பாராத விதமாக ரயிலில் இருந்து தவறி விழுந்து நடைமேடைக்கும் ரயில் பெட்டிக்கும் இடையே சிக்கிக் கொண்டார்.
இதனை கவனித்த ஜோலார்பேட்டை ரயில்வே காவல் நிலைய தலைமை காவலர் செல்வகுமார் என்பவர் துரிதமாக செயல்பட்டு ரயிலில் சிக்கிக்கொண்டு தவித்த உப்லவ் மேத்தாவை பத்திரமாக மீட்டார். இந்த சம்பவத்தில் வடமாநில தொழிலாளி உப்லவ் மேத்தாவின் காலில் காயம் ஏற்பட்டது. இதனை அடுத்து, அவர் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
சாதுரியமாக விரைந்து செயல்பட்டு வடமாநில தொழிலாளியின் உயிரை காப்பாற்றிய ரயில்வே தலைமை காவலர் செல்வகுமாருக்கு சக பயணிகளும், ரயில்வே காவல்துறையினரும் பாராட்டு தெரிவித்தனர்.