மயிலாடுதுறை மாவட்டத்துக்கு துலா உற்சவ கடைமுக தீர்த்தவாரியை முன்னிட்டு வரும் நவம்பர் 15ஆம் தேதி உள்ளுர் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மயிலாடுதுறை மாவட்டத்தில் ஐப்பசி மாதம் நடைபெறும் காவிரி துலா உற்சவம் உலக பிரசித்தி பெற்றதாகும் என்றும், ஐப்பசி மாதம் கடைசி நாள் நடைபெறும் கடைமுகத் தீர்த்தவாரி உற்சவத்தில் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து ஒரே நேரத்தில் புனித நீராடுவார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
எனவே உலக பிரசித்தி பெற்ற இந்த விழா நிகழாண்டு நவ.15-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், கடைமுகத் தீர்த்தவாரி விழாவினை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டத்துக்கு நவம்பர் 15ஆம் தேதி அன்று உள்ளுர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி உத்தரவிட்டுள்ளார். இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் நவம்பர் 23 (சனிக்கிழமை) பணி நாளாக அறிவிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.