ஒடிசா ரயில் விபத்து- புதுச்சேரி அரசு உதவி எண்கள் அறிவிப்பு
ஒடிசாவில் நடந்த கோரமண்டல் ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
ஒடிசாவில் நடந்த கோரமண்டல் ரயில் விபத்தில் 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இது நாடு முழுவதும் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில், “ஒடிசாவில் நடந்த கோரமண்டல் ரயில் கோர விபத்தினால் சுமார் 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும்,900க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் வருகின்ற செய்திகள் மிகுந்த மன வருத்தத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. இந்த விபத்தில் உயிரிழந்த அனைவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து கொள்கின்றேன்.
மேலும் படுகாயம் அடைந்து சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள அனைவரும் விரைவில் குணமடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றேன் , புதுச்சேரியைச் சார்ந்தவர்கள் யாரேனும் இந்த விபத்தில் சிக்கி இருப்பதாகத் தெரிந்தால், அவர்களை உடனடியாக மீட்கவும் அவர்களுக்குத் தேவையான அவசர உதவிகளை மேற்கொள்ள உதவும் வகையில், புதுச்சேரி மாநில அவசர கால கட்டுப்பாட்டு மையம், திறக்கப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் கட்டணமில்லா தொலைபேசி எண்கள் : 1070, 1077, 112 மற்றும் தொலைபேசி எண்கள்: 0413-2251003, 2255996 ஆகிய எண்களில் தொடர்புகொண்டு தகவல்களைத் தெரிவிக்கலாம். இந்த அவசரகால மையம் 24 மணிநேரமும் இயங்கும். மேலும் இதுவரை புதுச்சேரியை சேர்ந்தவர்கள் இறந்ததாகவோ, படுகாயமடைந்த்தாகவோ தகவல் இல்லை” என்றார்.