சங்ககிரி அருகே தேசிய நெடுஞ்சாலையில் கவிழ்ந்த ஆம்னி பேருந்து திடீரென தீப்பற்றி எரிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதிர்ஷ்ட வசமாக 20க்கும் மேற்பட்ட பயணிகள் உயிர்தப்பினர்.
சென்னையில் இருந்து 25 பயணிகளை ஏற்றிக்கொண்டு தனியார் ஆம்னி பேருந்து ஒன்று கோவை நோக்கி சென்று கொண்டிருந்தது. இன்று காலை சுமார் 6.30 மணி அளவில் சேலம் மாவட்டம் சங்ககிரி அருகேயுள்ள குப்பனூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது ஆம்னி பேருந்து, முன்னாள் சென்று கொண்டிருந்த இரண்டு சக்கர வாகனத்தின் மீது மோதி விபத்திற்குள்ளானது. இதில் கட்டுப்பாட்டை இழந்த அந்த பேருந்து, சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற சின்னாக்கவுண்டனூர் பகுதியை சேர்ந்த பெரியசாமி என்ற கூலி தொழிலாளி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், 20-க்கும் மேற்பட்ட பயணிகள் லேசான காயம் அடைந்த நிலையில், அவர்கள் அவசர அவசரமாக பேருந்தில் இருந்து வெளியேறினர்.
இதனிடையே விபத்து நடந்த சில நிமிடங்களில் எதிர்பாராத விதமாக பேருந்தின் முன்பகுதியில் திடீரென தீ பற்றி எரியத் தொடங்கியது. தீ மளமளவென பேருந்து முழுவதும் பரவி கொளுந்து விட்டு எரிந்தது. சங்ககிரி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அந்த வழியாக போக்குவரத்து நிறுத்தி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பின்னர் சங்ககிரி தீயணைப்பு துறையினர், போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். எனினும் இந்த விபத்தில் ஆம்னி பேருந்து முற்றிலும் எரிந்து சேதமடைந்தது.
பேருந்து கவிழ்ந்ததும் லேசான காயமடைந்த பயணிகள் உடனடியாக வெளியேறியதால் அதிர்ஷ்டவசமாக அனைவரும் உயிர்த்தபினர். இந்த விபத்தின் காரணமாக சேலம் – கோவை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.