பல்வீர்சிங் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு
விசாரணைக்கு வந்தோரின் பற்களை பிடுங்கிய விவகாரத்தில் பல்வீர் சிங் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம், சேரன்மாதேவி கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் பல்வீர் சிங் ஐ.பி.எஸ்., தமது காவல்பகுதிக்கு உட்பட்ட காவல் நிலையங்களில் புகாருக்கு உள்ளாகும் விசாரணைக் கைதிகளின் வாயில் கற்களைப் போட்டு கன்னத்தில் அடித்ததாகவும், கட்டிங் பிளேடால் பல கைதிகளின் பற்களைப் பிடுங்கிக் கொடுமைப்படுத்தியதாகவும், புதிதாக திருமணமான ஒருவர் புகாருக்கு ஆளான நிலையில், அவரது விதைப் பையை நசுக்கி சித்ரவதை செய்ததாகவும், இதனால் பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதையடுத்து பல்வீர் சிங் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவர் சஸ்பெண் செய்யப்பட்டார்.
இந்நிலையில் அம்பாசமுத்திரம் காவல்நிலையத்தில் அருண்குமார் என்பவர் அளித்த புகாரின்பேரில் பல்வீர் சிங் மீது மற்றொரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கல்லிடைக்குறிச்சி காவல்நிலையத்தில் வேதநாராயணன் என்பவர் அளித்த புகாரின் பேரில் பல்வீர் சிங் மீது மேலும் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஏற்கனவே சுபாஷ் என்பவர் அளித்த புகாரில் ஐபிஎஸ் அதிகாரி பல்வீர் சிங் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டுவருகிறது. விசாரணைக்கு வந்தவர்களின் பற்களை பிடுங்கிய விவகாரத்தில் பல்வீர் சிங் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.