திருவண்ணாமலை மகா தீபத்தின்போது 11,500 பக்தர்களுக்கும், கார்த்திகை பரணி தீபத்தின்போது 7500 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்தார்.
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா டிசம்பர் 4-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 10 நாள் திருவிழாவின் முக்கிய நிகழ்வான 2668 அடி அருணாச்சலேஸ்வரர் மலை உச்சியில் டிசம்பர் 13-ம் தேதி மாலை 6 மணிக்கு மகா தீபம் ஏற்றப்படும். இதனையொட்டி, அருணாச்சலேஸ்வரர் கோயில் கோவில் நான்காம் பிரகாரம் அருகில் கார்த்திகை தீப நெய்குட காணிக்கை செலுத்தும் கவுண்டரை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் இன்று துவங்கி வைத்தார். இந்த ஆண்டு நெய் காணிக்கை கிலோ 250 ரூபாய்க்கும் அரை கிலோ 150 ரூபாய்க்கும் 1/4 கிலோ 80 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.
தொடர்ந்து, அண்ணாமலையார் கோவில் கார்த்திகை தீப விழா முன்னேற்பாடுகள் தொடர்பாக அனைத்து துறை அலுவலர்களுடன், மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் ஆலோசனை நடத்தினார். கார்த்திகை தீபத் திருவிழாவின்போது அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப் படுவதால், அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதி மற்றும் முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. துறை வாரியாக செய்ய வேண்டிய பணிகள் குறித்து ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர் பாஸ்கர பாண்டியன், அருணாச்சலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீப திருவிவிழா கொடியேற்றம் டிசம்பர் 4ஆம் தேதி நடைபெற உள்ளதாகவும், முக்கிய நிகழ்வாக 6ஆம் நாள் உற்சவமாக வெள்ளி ரதம், 7ஆம் நாள் உற்சவத்தில் மகா ரதங்கள் மாடவீதியில் வலம் வர உள்ளதாகவும் தெரிவித்தார். 10ஆம் நாள் உற்சவத்தன்று 35 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
மேலும், பரணி தீபத்தன்று 7,500 பேரும், மகா தீபத்தின்போது 11,500 பேர் மட்டும் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும், 2000 பக்தர்கள் முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் மலை ஏற அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார். குறிப்பாக வரும் 8ஆம் தேதி மகா ரத தேர் வெள்ளோட்டத்தின்போது மாட வீதிகளில் மின்இணைப்புகள் துண்டிப்பு செய்யப்படும் என்று ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் கூறினார். மேலும் ஆன்லைன் மூலம் பரணி தீபத்திற்கு 500 பேருக்கும், மகா தீபத்திற்கு 1,100 பேருக்கும் கட்டண டிக்கெட்டுகள் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.