தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மறைவு தமிழ்நாட்டு மக்களுக்கு பேரிழப்பு என முன்னாள் முதலமைச்சர் ஓ .பன்னீர்செல்வம் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்த் திரைவானில் கொடிகட்டி பறந்தவரும், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும், தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தின் நிறுவனருமான அன்புச் சகோதரர் திரு. விஜயகாந்த் அவர்கள் உடல் நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து ஆற்றொணாத் துயரமும், மிகுந்த மன வேதனையும் அடைந்தேன்.
‘புரட்சிக் கலைஞர்’ என்றும், ‘கேப்டன்’ என்றும் தனது ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்ட அன்புச் சகோதரர் திரு. விஜயகாந்த் அவர்கள், தேச பக்தியையும், தெய்வ பக்தியையும் ஒருங்கே பெற்றவர். சாதி, மத பேதமின்றி ஏழையெளிய மக்களுக்கு உதவி செய்யும் மனப்பான்மை கொண்டவர். தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவராக இருந்த காலத்தில் பல நிகழ்ச்சிகள்மூலம் சங்கத்தின் கடனை அடைத்தவர் திரு. விஜயகாந்த் என்பது குறிப்பிடத்தக்கது.
சட்டம் ஒரு இருட்டறை, ரமணா, வைதேகி காத்திருந்தாள், ஊமை விழிகள், அம்மன் கோயில் கிழக்காலே, கேப்டன் பிரபாகரன், சின்ன கவுண்டர் போன்ற வெற்றிபடங்கள் மூலம் ரசிகர்களின் மனங்களை கொள்ளை கொண்டவர். கலைமாமணி உட்பட பல்வேறு விருதுகளுக்கு சொந்தக்காரர். தனியாக ஒரு கட்சியைத் துவக்கி, சட்டமன்ற உறுப்பினராகவும், எதிர்க்கட்சித் தலைவராகவும் உயர்ந்த பெருமை இவருக்கு உண்டு. திரையுலகிலும், அரசியலிலும் தனக்கென தனி முத்திரையைப் பதித்தவர் திரு. விஜயகாந்த் அவர்கள். அவருடன் அரசியல் ரீதியாக நெருங்கிப் பழகிய அனுபவம் எனக்கு உண்டு. இவருடைய இடத்தை இனி யாராலும் நிரப்ப முடியாது. இவரது இழப்பு தமிழ்நாட்டு மக்களுக்கு பேரிழப்பாகும்.
திரு. விஜயகாந்த் அவர்கள் உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தபோது அவரை உடனிருந்து கண் இமை போல் காத்தவர் அவரது மனைவி அன்புச் சகோதரி திருமதி பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் என்பதை இந்தத் தருணத்தில் நினைவுகூர்கிறேன். அன்புச் சகோதரர் திரு. விஜயகாந்த் அவர்களை இழந்து வாடும் அவரது மனைவி அன்புச் சகோதரி திருமதி பிரேமலதா விஜயகாந்த் அவர்களுக்கும், அவர்தம் குடும்பத்திற்கும், திரைப்பட ரசிகர்களுக்கும், தேசிய முற்போக்கு திராவிடக் கழகத் தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.