சென்னையில் தனியார் பேருந்து- திமுக இரட்டை வேடம்: ஓபிஎஸ்
எதிர்க்கட்சியாக இருந்தபோது தனியார்மயமாக்குதலுக்கு எதிராக குரல் கொடுத்து வந்த திமுக, ஆட்சிக்கு வந்தபிறகு தனியார்மயமாக்க துடிப்பது திமுகவின் இரட்டை வேடத்திற்கு மற்றுமோர் சான்று என ஓ.பன்னீர்செல்வம் சாடியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அரசு பேருந்துகள் மட்டுமே இயங்கிக் கொண்டு இருக்கின்ற சென்னையில் தனியார் பேருந்துகளையும் அனுமதிக்க அரசு முடிவு எடுத்துள்ளதாகவும் இதற்கான ஒப்பந்த புள்ளிகள் கோரப்பட்டுள்ளதாகவும் இதற்கு தொழிற்சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும் செய்திகள் வந்துள்ளன.
சென்னையில் தனியார் பேருந்துகளை இயக்க முடிவு எடுத்திருக்கும் திமுக அரசுக்கு அதிமுக சார்பில் கடும் கண்டனத்தை முதற்கண் தெரிவித்துக் கொள்கிறேன். அரசு போக்குவரத்து கழகங்கள் லாபத்தில் இயக்கப்படும், பேருந்து கட்டணங்கள் சீரமைக்கப்படும், போக்குவரத்து தொழிலாளர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்றெல்லாம் வாக்குறுதி அளித்துவிட்டு இவற்றிலிருந்து முற்றிலும் முரணாக தனியார் பேருந்துகளை இயக்க அனுமதிப்பது என்ற திமுக அரசின் முடிவு பொதுமக்களையும் போக்குவரத்து தொழிலாளர்களையும் ஏமாற்றம் செயல். ஒரு வேலை ஏமாற்றுவதற்கு பெயர்தான் “திராவிட மாடல்” போலும்!
தனியார் நிறுவனங்களை அனுமதித்தால் அரசுக்கு வரும் வருவாய் கணிசமாக குறைந்து, கூடுதல் இழப்பு ஏற்படும். தனியார் பேருந்துகள் அனுமதிக்கப்பட்டால் லாப நோக்கத்தில் தான் செயல்படுமே தவிர சேவை மனப்பான்மையுடன் செயல்படாது. ஒரு நிறுவனம் நஷ்டத்தில் இயங்குகிறது என்றால் அதனை லாபத்தில் கொண்டு வருவதற்கான முயற்சி ஈடுபட வேண்டுமே தவிர நிறுவனத்தையே மூடும் நிலைக்கு கொண்டு செல்லக்கூடாது.
சென்னையில் தனியார் பேருந்துகளை அனுமதிப்பது என்ற முடிவு “மூட்டைப்பூச்சிக்கு பயந்து வீட்டை கொளுத்துவது” என்ற பழமொழியை தான் நினைவுப்படுத்துகிறது. ஏற்கனவே நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் பேருந்து சேவையை தனியார் இடத்திலே ஒப்படைப்பது என்பது நாட்டை தனியார் இடத்தில் ஒப்படைப்பதற்கு சமம். அரசு போக்குவரத்து கழகங்களில் உள்ள சவால்களை திறம்பட எதிர் கொண்டு அவற்றை முன்னேற்ற பாதையில் அழைத்துச் செல்ல வழி வகுப்பதுதான் திறமையான அரசுக்கு ஒரு எடுத்துக்காட்டாக அமையும். இதை விடுத்து தனியார் பேருந்துகளை அனுமதிப்பது என்பது அரசின் நிர்வாக திறமையின்மையை தான் எடுத்துக்காட்டுகிறது.
எனவே சென்னையில் தனியார் பேருந்துகளை இயக்க அனுமதிப்பது என்ற முடிவையுடன் கைவிடவும், ஆய்வு செய்ய கோரப்பட்டுள்ள ஒப்பந்த புள்ளியினை ரத்து செய்யவும், அரசு போக்குவரத்துக் கழகங்களை லாபத்தில் இயக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசை அதிமுக சார்பில் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.