100க்கும் மேற்பட்ட பெண்கள் காலிகுடங்களுடன் திடீர் மறியல் – போக்குவரத்து பாதிப்பு
செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த மதுராந்தகம் ஒன்றியத்திற்கு உட்பட்ட அரையப்பாக்கம் ஊராட்சியில் சுமார் 1000த்திற்கு மேற்பட்டோர் வாழ்ந்து வருகின்றனர்.
இந்த ஊராட்சியில் கடந்த ஒரு மாதமாக குடிநீர் சரிவர விநியோகிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இரு தினங்களுக்கு ஒரு முறை மட்டும் குறைந்த நேரத்தில் தண்ணீர் வழங்கப்பட்டதாக தெரிகிறது.
இதனால் பொதுமக்கள் அத்தியாவசிய தேவைக்கு தண்ணீர் இல்லாமல் பெரும் அவதி அடைந்தனர். இதன் காரணமாக கூடுதல் பணம் கொடுத்து குடிநீர் வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. குடிநீர் தண்ணீர் வழங்ககோரி கிராமமக்கள் சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகிகளிடம் தெரிவித்தும் குடிநீர் பிரச்சினை தீர்க்கப்படவில்லை.
தொடர்ந்து குடிநீர் தண்ணீருக்காக அவதிப்படும் நிலை ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி பெண்கள் உட்பட சுமார் நூறுக்கும் மேற்பட்டோர் இன்று காலை மேலவளம் – திருக்கழுக்குன்றம் பிரதான நெடுஞ்சாலையில் காலி குடங்களுடன் திடீரென்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆண்கள் சிலர் ரோட்டில் படுத்து நூதன போராட்டம் நடத்தினர். இதனால் அப்பகுதியில் மிக பரபரப்பு ஏற்பட்டது. வாகன நெரிசலும் ஏற்பட்டது. இத்தகவலை அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். குடிநீர் கிடைக்க சம்பந்தப்பட்டவர்களிடம் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.
இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட கிராமமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதுகுறித்து கிராமமக்கள் கூறும்போது எங்கள் பகுதிக்கு குடிநீர் சரிவர வினியோகிக்கப்படாததால் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளோம்.
இதுபற்றி சம்பந்தப்பட்டவர்களிடம் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. மக்கள் தொகைக்கு ஏற்ப குடிநீர் ஆதாரங்களை உருவாக்காதது தான் குடிநீர் தட்டுப்பாடுக்கு காரணம் என்றனர்.