Homeசெய்திகள்தமிழ்நாடுசான்றிதழ் இல்லை.. 6 வயது குழந்தையை மீட்க முடியாமல் தவிக்கும் பெற்றோர்..

சான்றிதழ் இல்லை.. 6 வயது குழந்தையை மீட்க முடியாமல் தவிக்கும் பெற்றோர்..

-

பழங்குடியினத்தைச் சேர்ந்த 6 வயது குழந்தையை பிடித்து வைத்துக்கொண்டு, ‘இது உங்கள் குழந்தைதானா என நிரூபிக்க சான்றிதழ் காட்டுங்கள்’ எனக்கூறி குழந்தைகள் நலத்துறை அலைக்கழிப்பதாக பெற்றோர் வேதனை தெரிவிக்கின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே மோரை ஜெ.ஜெ நகர் பகுதியில் 300 க்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். பழங்குடியினத்தில் ‘சோழகன்’ என்ற வகுப்பை சேர்ந்த இவர்கள் சாட்டை அடித்து யாசகம் கேட்டு பிழைப்பு நடத்தி வருகின்றனர். இவர்கள் பல ஆண்டுகளாக படிப்பறிவின்றி, பிள்ளைகளையும் பள்ளிக்கு அனுப்பாமல், அவர்கள் செய்யும் தொழிலையே கற்றுகொடுத்து வாழையடி வாழையாக வாழ்ந்து வருகின்றனர். தங்களுக்கு குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை மட்டுமே வழங்கியுள்ள அரசு, ஆதார் கார்டு, பிறப்பு /இறப்பு சான்றிதழ் என எந்த அடையாள ஆவணங்களையும் அரசு வழங்கவில்லை என குற்றம் சாட்டுகின்றனர். சாதிச் சான்றிதழ் இல்லாததால் பிள்ளைகளை படிக்க வைக்க முடியாமல் தவிப்பதாக கூறுகின்றனர்.

சான்றிதழ் இல்லை.. 6 வயது குழந்தையை மீட்க முடியாமல் தவிக்கும் பெற்றோர்..

இவர்களுக்கென நிரந்தர வசிப்பிடம் இல்லாததால் , வித்தை காட்டி யாகசம் தேடிச் செல்லும் இடங்களில் எல்லாம் குடிசை போட்டு தங்குவதால், குழந்தைகளையும் தங்களோடு அழைத்துச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அப்படி சாட்டையடி தொழில் ஈடுபடும் தேசையா – ராவனம்மாள் தம்பதியின் 6 வயது மகள் கங்காவை, கடந்த மாதம் குழந்தைகள் நலத்துறையினர் அழைத்துச் சென்றுள்ளனர். குழந்தையைக் காணவில்லை என பல இடங்களில் தேடித்திரிந்த பெற்றோர், கடைசியாக கங்கா முகப்பேரில் உள்ள காப்பகம் ஒன்றில் இருப்பதை தெரிந்துகொண்டனர். பின்னர் அங்கு சென்று குழந்தையை தங்களிடம் கொடுக்குமாறு கேட்டுள்ளனர்.

ஆனால் குழந்தைகள் நலத்துறையினரோ, இது உங்கள் குழந்தை தானா? அதற்கு என்ன சான்று?? ஆதார், பிறப்புச் சான்றிதழ் இருந்தால் அவற்றைக் காண்பித்துவிட்டு குழந்தையை பெற்றுச்செல்லுங்கள் என்று கூறி அனுப்பியுள்ளனர். ஆனால் பழங்குடி மக்களான இவர்களிடம் எந்தவொரு ஆவணம் இல்லாததால் குழந்தையை மீட்க முடியாமல் தவித்து வருகின்றனர். மேலும், மோரை ஊராட்சி மன்ற தலைவர் திவாகரன், குழந்தை கங்காவின் பெற்றோர் இவர்கள் தான் என்று கடிதம் ஒன்றையும் வழங்கியிருக்கிறார். அந்தச் சான்றையும் குழந்தைகள் நலத்துறையினர் ஏற்க மறுத்ததால், செய்வதறியாமல் தவிக்கின்றனர். அத்துடன் சான்றிதழ் வழங்கக் கோரி ஒரு மாதமாக அரசு அலுவலகங்களுக்கு அலைந்து வருகின்றனர்.

சான்றிதழ் இல்லை.. 6 வயது குழந்தையை மீட்க முடியாமல் தவிக்கும் பெற்றோர்..

இது குறித்து அந்த பகுதி சமூக மக்களின் தலைவர் கூறுகையில், “சாதி சான்று, ஆதார் போன்ற அரசு திட்டங்கள் கிடைக்காததால் பல்வேறு வகையில் நாங்கள் பாதிக்கப்பட்டு வருகிறோம். எங்கள் குலத்தொழில் சாட்டை அடித்து யாசகம் செய்வது தான். இதைவிட்டு வெளியே வர அரசு தங்களுக்கு உதவ வேண்டும். நாங்கள் திருடவில்லை,கொள்ளை அடிக்கவில்லை; எங்கள் மீது இதுவரை காவல் நிலையத்தில் எந்தவொரு புகாரும் இல்லை. நாங்கள் உடலை வருத்தி அதன் மூலம் யாசகம் செய்து வருகிறோம். இந்தநிலை எங்கள் அடுத்த தலைமுறைக்கு வர வேண்டாம் என்று நினைத்து பள்ளிக்கு அனுப்பினால் தங்களுக்கு கிடைக்க வேண்டிய எந்த திட்டமும் கிடைக்கப்பெறவில்லை.

இதற்கு முக்கிய காரணம் சாதிச்சான்று இல்லாதது தான். தங்கள் மொழி, வாழ்வியல், குலத்தொழில் அனைத்தும் எங்கள் பழங்குடியின மூதாதியர் வழி வந்தது. இது நாள் வரை அப்படியே இருக்கும் சூழலில் தங்களுக்கு தங்கள் உரிமைகள் மறுக்கப்பட்டு வருகிறது. நாங்கள் பிழைப்பு தேடி செல்லும்போது பிள்ளைகள் பாதுகாப்பிற்காகவும், பட்டினியாகவும் இருக்க கூடாது என என்பதற்காகவே எங்களுடன் அழைத்து செல்வது வழக்கம். ஆனால் அங்கு வந்து உங்கள் குழந்தையா எனக்கூறி பிடித்து செல்கின்றனர். ஒரு மதமாகியும் குழந்தையை மீட்க முடியாமல் தவித்து வருகின்றோம்.” என்று தெரிவித்தார்..

MUST READ