Homeசெய்திகள்தமிழ்நாடுவிமானத்தில் பயணிக்க சீட் இல்லாததால் பயணிகள் தவிப்பு

விமானத்தில் பயணிக்க சீட் இல்லாததால் பயணிகள் தவிப்பு

-

பொங்கல் பண்டிகையை ஒட்டி சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. மதுரை, தூத்துக்குடி, மற்றும் திருச்சி விமானங்களில் ஜனவரி 13 மற்றும் 14 ஆகிய நாட்களுக்கான டிக்கெட்டுகள் நிரம்பிவிட்டன. அதிக கட்டணம் கொடுத்தாலும், விமானங்களில் சீட் இல்லாததால் பயணிகள் தவிப்பு.

பண்டிகை காலங்களில் இயக்கப்படும், நேரடி கூடுதல் விமான சேவைகள், இம்முறை  இயக்கப்படாததால் பயணிகள் பரிதவிப்பு.

பொங்கல் பண்டிகையை தங்களுடைய சொந்த ஊர்களில் கொண்டாடுவதற்காக, சென்னையில் வசிக்கும் வெளியூர் மக்கள், குறிப்பாக தென் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள், கூட்டம் கூட்டமாக சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு செல்கின்றனர். ரயில், பஸ், கார் போன்றவைகளில், பெரும் அளவு செல்கின்றனர்.

அதோடு கடைசி நேரத்தில், விமானங்களில் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு, பயணிகள் பெரும் முயற்சிகள் எடுத்து வருகின்றனர்.

இதை அடுத்து சென்னை விமான நிலையத்தில் இருந்து மதுரை, தூத்துக்குடி, திருச்சி, கோவை செல்லும் விமானங்களில் பயணிகள் கூட்டம் பெரும் அளவு அலைமோதுகிறது.

இதனால் சென்னையில் இருந்து, செந்த ஊர்களுக்கு  செல்லும் விமானங்களில் பயண டிக்கெட்  கட்டணம் பல மடங்கு உயர்ந்து உள்ளது.

ஆனாலும், பயணிகள் கட்டண உயர்வு பற்றி கவலைப்படாமல், சொந்த ஊரில், பொங்கல் பண்டிகையை கொண்டாட, விமானங்களில் பயணிக்க தொடங்கி இருக்கின்றனர்.

சென்னை விமான நிலையத்தில், நேற்று மாலையிலிருந்தே பயணிகள் கூட்டம், அலைமோதியது. ஆனால் இன்று கடும் கூட்ட  நெரிசல் ஏற்பட்டுள்ளது.

இதனால், பயணிகள் விமானங்களில் பயணிக்க அதிக கட்டணங்கள்  கொடுக்க முன் வந்தாலும், விமானங்களில் சீட் இல்லை என்ற  நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால் பயணிகள் பெரும் ஏமாற்றம், கவலை அடைந்துள்ளனர்.

மதுரைக்கு சென்னையில் இருந்து தினமும் 6  விமான சேவைகள் உள்ளன. இன்று 13 ஆம் தேதி வெள்ளிக்கிழமை, இந்த 6 விமானங்களிலுமே டிக்கெட் இல்லை.

அனைத்து விமானங்களும் புல் ஆகிவிட்டன. இதை அடுத்து, சென்னையில் இருந்து மதுரைக்கு, பெங்களூர் வழியாக, இன்று 3  விமானங்கள் இயக்கப்படுகின்றன. அந்த விமானங்களில் டிக்கெட் கட்டணம் 15 ஆயிரத்திலிருந்து 19 ஆயிரம் வரை உள்ளன.

நாளை 14ஆம் தேதி சனிக்கிழமை சென்னையில் இருந்து மதுரை செல்லும் ஆறு விமானங்களில் ஒரு விமானத்தில் டிக்கெட்கள் முழுமையாக புல் ஆகிவிட்டது.

5 விமானங்களில் ஒரு சில சீட்கள் மட்டுமே உள்ளன. அதில் டிக்கெட் கட்டணம் 12,500 வரையில் வசூலிக்கப்படுகிறது சாதாரணமாக சென்னையில் இருந்து மதுரைக்கு ரூபாய் 3,600 இல் இருந்து 4000 வரை தான் டிக்கெட் கட்டணம்.

அதைப்போல் சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு தினமும் 3  விமானங்கள் இயக்கப்படுகின்றன. அந்த விமானங்களில் ஒரு சில டிக்கெட்கள் மட்டுமே உள்ளன. கட்டணம் ரூபாய் 14,000 லிருந்து, ரூபாய் 15,000 வரையில் வசூலிக்கப்படுகிறது.

பயணிகள் கூட்டத்தை சமாளிப்பதற்காக, சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு பெங்களூர் வழியாக இரண்டு விமானங்கள் இன்று இயக்கப்படுகின்றன. ஆனால் அதில் கட்டணம் ரூபாய் 17,000 லிருந்து, 20,000 வரையில் வசூலிக்கப்படுகிறது.

அதைப்போல் தூத்துக்குடிக்கு நாளை 14 ஆம் தேதி சனிக்கிழமை, மூன்று விமானங்களிலும் டிக்கெட்கள் காலி ஆகிவிட்டன. பெங்களூர் வழியாக தூத்துக்குடி  செல்லும், ஒரு விமானத்தில் மட்டும் ஒரு சில சீட்டுகள் உள்ளன.

அதிலும் கட்டணம் 15,000 வரை வசூலிக்கப்படுகிறது. சாதாரண நாட்களில் சென்னை-தூத்துக்குடி விமான கட்டணம், ரூபாய் 5,000 லிருந்து 5,300 வரையில் வசூலிக்கப்படும்.

அதைப்போல் சென்னையில் இருந்து திருச்சிக்கு தினமும் 4  விமானங்கள் இயக்கப்படுகின்றன. இந்த 4  விமானங்களிலும், இன்று ஒரு சில சீட்கள் மட்டுமே உள்ளன. ஆனால் டிக்கெட் கட்டணம் 9 ஆயிரத்திலிருந்து 13 ஆயிரம் வரையில் வசூலிக்கப்படுகிறது.

சென்னையில் இருந்து பெங்களூர் வழியாக திருச்சி செல்லும் ஒரு விமானத்தில் மட்டும் சீட்டுகள் உள்ளன. கட்டணம் 15,000 வரை வசூலிக்கப்படுகிறது.

அதைப்போல் நாளை 14 ஆம் தேதி சனிக்கிழமை சென்னையில் இருந்து திருச்சி செல்லும் 4  விமானங்களில் இரண்டு விமானங்களில் டிக்கெட் புல்லாகி விட்டன. மற்றும் இரண்டு விமானங்களில் மட்டுமே டிக்கெட் இருக்கிறது. டிக்கெட் கட்டணம் 10,000-க்கும் மேல் வசூலிக்கப்படுகிறது. பெங்களூர் வழியாக திருச்சி செல்லும் இரண்டு விமானங்களில் டிக்கெட்டுகள் இருக்கின்றன. ஆனால் டிக்கெட் கட்டணம் ரூபாய் 14,000. மற்ற நாட்களில் சென்னை-திருச்சி  விமான கட்டணம் ரூபாய் 3,500 மட்டுமே.

அதைப்போல், சென்னையில் இருந்து கோவைக்கு தினமும் 6  விமானங்கள் இயக்கப்படுகின்றன. இன்று  அனைத்து விமானங்களிலும் டிக்கெட் மிகக் குறைந்த அளவில் உள்ளன. அதைப்போல் கட்டணம் ரூபாய் 10 ஆயிரத்திலிருந்து 14,000 வரையில் வசூலிக்கப்படுகிறது.

நாளை 14 ஆம் தேதி சனிக்கிழமை கோவைக்கு செல்லும் 6  விமானங்களில் 4  விமானங்களில் மட்டுமே டிக்கெட் உள்ளன. 2  விமானங்களில் டிக்கெட்கள் புல் ஆகிவிட்டன. அதிலும் கட்டணம் 10 ஆயிரத்திலிருந்து 14,000 ரூபாய் வரையில் வசூலிக்கப்படுகிறது. சாதாரண நாளில் கோவைக்கு விமான கட்டணம் ரூபாய் 3,500 மட்டுமே.

சென்னை விமான நிலையத்தில்  இதை போல் பண்டிகை காலங்களில் டிக்கெட் கட்டணங்கள் அதிகரிப்பது வழக்கம் தான். ஆனால் அதே நேரத்தில், விமான நிறுவனங்கள் கூடுதலாக விமானங்களை இயக்குவதால், விமானத்தில் சீட் இல்லை என்ற நிலை ஏற்படாது.

கடந்த தீபாவளி, கிறிஸ்மஸ், புத்தாண்டு, காலங்களில் மதுரை, தூத்துக்குடி, கோவை, திருவனந்தபுரம், கொச்சி, மும்பை உள்ளிட்ட அனைத்து இடங்களுக்கும் கூடுதல் விமான சேவைகளை இயக்கினார்கள்.

ஆனால் இம்முறை விமான நிறுவனங்கள் கூடுதல் விமான சேவைகளை இயக்கவில்லை. அதற்குப் பதிலாக, பெங்களூர் வழியாக சுற்று வழித்தடத்தில் இயக்குகின்றனர். இதனால் பயண நேரமும் அதிகமாவதோடு, டிக்கெட் கட்டணமும் பல மடங்கு அதிகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது.

சென்னையில் இருந்து தமிழ்நாட்டிற்குள் மதுரை, திருச்சி, கோவை, தூத்துக்குடி ஆகிய இடங்களுக்கு செல்லும் விமானங்களை தவிர மற்ற மாநிலங்களுக்கு செல்லும் அனைத்து உள்நாட்டு  விமானங்களும், வழக்கமான கட்டணத்தில் இயக்கப்படுகின்றன. பயணிகள் கூட்டமும் அந்த விமானங்களில் குறைவாகவே உள்ளனர்.

தமிழர்களின் திருநாளான பொங்கல் பண்டிகை, தமிழ்நாட்டில் மிக சிறப்பாக கொண்டாடப்படுவதால், தமிழ்நாட்டிற்குள் செல்லும் விமான சேவைகள் மட்டுமே இதைப் போன்ற அதிக கட்டணம், டிக்கெட் கிடைக்காத நிலை, போன்றவைகள் ஏற்பட்டுள்ளன.

MUST READ