இன்று பிற்பகல் நிலவரப்படி அதி தீவிர புயலாக வலுப்பெற்றுள்ள மிக்ஜம் புயல் சென்னைக்கு 90 கிலோ மீட்டர் வடகிழக்கிலும், நெல்லூருக்கு 140 கிலோ மீட்டர் தென்கிழக்கிலும் மையம் கொண்டுள்ளது. மணிக்கு 10 கிலோமீட்டர் வேகத்தில் புயல் கரையை நெருங்கிக் கொண்டிருக்கிறது. அதன்படி இன்று இரவு புயல் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. படிப்படியாக வடக்கு திசையில் நகரும் இப்புயல் ஏற்கனவே அறிவித்தபடி நெல்லூர் மற்றும் மசூலிப்பட்டினம் இடையே கரையை கடக்க வாய்ப்பு உள்ளது. புயல் கரையை நெருங்க நெருங்க நிலப்பகுதியில் வீசும் தரை காற்றின் வேகம் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. தற்போது மணிக்கு 60 முதல் 70 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசி வருகிறது. அவ்வப்போது சூறைக் காற்றின் வேகத்தையும் உணர முடிகிறது. புயல் கரையை கடக்கத் தொடங்கும் வரை காற்றின் வேகம் இதே அளவில் தான் இருக்கும் என்றும் புயலானது கரையை கடக்க தொடங்கும் போது காற்றின் வேகம் மணிக்கு 110 கிலோ மீட்டர் வரை வீச கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதிதீவிர புயலாக கரையை கடக்கும் மிக்ஜம் படிப்படியாக வலுவிழக்கும். புயலின் தாக்கத்தால் இன்னும் இரண்டு நாட்களுக்கு வட கடலோர பகுதிகளில் கனமழை தொடரும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வட தமிழகம், தெற்கு ஆந்திர பிரதேச பகுதிகளில் இப்புயலால் பலத்த சேதங்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். மக்கள் பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மின்கம்பங்கள் மற்றும் மரங்களின் அருகில் மக்கள் இருப்பதை தவிர்த்தல் நல்லது. வாகன ஓட்டிகள் சாலைகளில் மேடு பள்ளங்களை பார்த்து செல்வது கடினம் என்பதால் கூடுமானவரையில் போக்குவரத்தை தவிர்ப்பது நல்லது. மேலும் காற்றின் வேகம் அதிகரித்திருப்பதால் இரு சக்கர வாகன ஓட்டிகளை பெரிதும் பாதிக்கும். புயல் குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக செயல்படுத்தப்பட்டுள்ளன. காவல்துறையும் தொடர்ந்து மக்களை எச்சரித்து வருகின்றனர்.