ரயிலில் சென்ற வடமாநில தொழிலாளர்கள் 6 பேரை வேலை தருவதாக கூறி கடத்தி சென்று,தாக்குதல் நடத்தி பணம் பறித்த வழக்கில் 7 பேரை ஈரோடு போலீசார் கைது செய்துள்ளனர்….
பீகாரில் இருந்து கூலி வேலை செய்வதற்காக கடந்த 14ஆம் தேதி கேரளா செல்லும் ரயிலில் வட மாநில தொழிலாளர்கள் வால்மீகி, ஜிதேந்தர் குமார், வினய்குமார், பவன் குமார், அசோக் குமார், சித்தார்ய குமார் ஆகிய 6 பேர் வந்துள்ளனர்.அதே ரயிலில் பயணம் செய்த பிபின்குமார் என்ற நபர், ஈரோட்டில் அதிக சம்பளத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி ஈரோடு ரயில் நிலையத்தில் வட மாநில தொழிலாளர்கள் 6 பேரையும் இறக்கி அழைத்து சென்றுள்ளார். ஈரோடு ரயில்நிலையம் அருகே விடுதியில் 6 பேரையும் தங்க வைத்த பிபின் குமார், அடுத்த நாள் மேலும் சிலருடன் வந்து 6 பேரையும் டெம்போ டிராவலர் ஒன்றில் ஏற்றி சென்றுள்ளார்.
ஈரோடு பெரிய சேமூர் தென்றல் நகர் செல்லும் வழியில் வீடு ஒன்றில் ஆறு பேரையும் அடைத்து வைத்த பிபின்குமார் தலைமையிலான அந்த கும்பல், தடி மற்றும் பெல்டால் தொழிலாளர்களை அடித்து அவர்களிடம் இருந்த செல்போன் மற்றும் பணத்தை பறித்துள்ளனர். மேலும் தொழிலாளர்களின் உறவினர்களிடம் இருந்தும் கூகுள் பே மூலமாக பணம் பெற்றுள்ளனர். மொத்தமாக 1 லட்சத்து 39 ஆயிரம் ரூபாயை பறித்துள்ளனர்..
பின்னர், ஆறு பேரையும் கோவை செல்லும் வழியில் இறக்கிவிட்டு அந்த கும்பல் தலைமறைவாகியது. இதனையடுத்து வடமாநில தொழிலாளர்கள் சென்னையில் உள்ள நண்பரை தொடர்பு கொண்டு சென்னை சென்றுள்ளனர். அங்கு ஆறு பெரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர் .
இது குறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த ஈரோடு வடக்கு காவல் நிலைய போலீசார், கடத்தி பணம் பறித்த சம்பவத்தில் தொடர்புடைய பிபின் குமார், தமிழ்ச்செல்வன், சுபாஷ், பிரகாஷ், சசிகுமார், பூபாலன், கண்ணன் ஆகிய ஏழு பேரை கைது செய்துள்ளனர்.இவர்களிடம் இருந்து பத்தாயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய புகழேந்தி, மோதிலால் உள்ளிட்ட மூன்று பேரை போலீசார் தேடி வருகின்றனர்.கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட டெம்போ ட்ராவலர் பறிமுதல செய்யப்பட்டுள்ளது.கைதான 7 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறை காவலுக்கு அனுப்பப்பட்டனர்.
இந்த சம்பவத்தில் கைதான பிபின் குமார் பீகாரை சேர்ந்தவர். மற்ற 6 பேரும் ஈரோட்டை சேர்ந்தவர்கள். பிபின்குமார் இந்த கடத்தலுக்கு மூளையாக செயல்பட்டுள்ளார். இவர்மீது ஏற்கனவே இது போன்ற வழக்கு நிலுவையில் உள்ளது. மற்ற 6 பேரையும், பிபின்குமார் 2 ஆயிரம் ரூபாய் சம்பளத்திற்கு நியமித்து இந்த சம்பவத்தை அரங்கேற்றி இருக்கிறார்.