டாஸ்மாக் கடையில் பெட்ரோல் குண்டு வீச்சு- விற்பனையாளர் பலி
காரைக்குடி அருகே பள்ளத்தூர் டாஸ்மாக் கடையில் பெட்ரோல் குண்டு வீச்சில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த விற்பனையாளர் அர்சுணன் சிகிச்சை பலனின்றி பலியானார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே பள்ளத்தூர் கடை வீதியில் உள்ள அரசு டாஸ்மாக் மதுபான விற்பனை கடை உள்ளது. இதன் விற்பனையாளராக அர்ஜுனன் என்பவர் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் கடந்த 3-ம் தேதி இரவு கடையை பாதியளவு அடைத்துவிட்டு மது விற்பனை கணக்குகளை சரி பார்த்து கொண்டிருந்தார். அப்போது கடை முன் வந்த பள்ளத்தூர் பகுதியை சேர்ந்த ராஜேஷ் பாண்டி என்ற வாலிபர் மதுவால் தன் குடும்பம் சீரழிந்து வருவதால் மதுக்கடையை தீயிட்டு அழித்துவிட்டால் மதுக்கடை திறக்க முடியாது என்ற கோபத்தில் கையில் மறைத்து வைத்திருந்த பெட்ரோல் நிரப்பப்பட்ட பாட்டிலில் தீயை பற்ற வைத்து கடைக்குள் வீசினார் .
இதில் மூன்று அட்டைப்பெட்டியில் மது பாட்டில்கள் தீப்பிடித்து எரிந்து சேதமானது. மேலும் ரூ.76,880 பணமும் எரிந்து சேதமானது. இச்சம்பவத்தில் பணியில் இருந்த இளையான்குடியை சேர்ந்த அர்ச்சுனன் உடலில் 60% தீ காயமடைந்தது. உடனடியாக அவரை மீட்ட அக்கம்பத்தினர் மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்றுவந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
விற்பனையாளர் இறந்த நிலையில் வழக்கை கொலை வழக்காக மாற்றிய போலீசார், சம்பவத்தில் குண்டு வீசியதில் காயம் ஏற்பட்டு கைது செய்து சிகிச்சை பெற்று வரும் ராஜேஸ் பாண்டியிடம் மேலும் விசாரணை நடத்திவருகின்றனர்.