ஹெலிகாப்டர் விபத்தில் தேனியை சேர்ந்த விமானி பலி
அருணாச்சலபிரதேசத்தில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த விமானிகளில் ஒருவர் தேனியை சேர்ந்தவராவார்.
இந்திய ராணுவ வீரர் மேஜர் A.ஜெயந்த் என்பவரும் அவருடன் இன்னொரு கமாண்டரும் நேற்று முன்தினம் அருணாசல பிரதேசத்தில் நடந்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தனர். அதில் தேனி மாவட்டம் பெரியகுளம் வட்டம் ஜெயமங்கலம் கிராமம் வஉசி தெருவை சேர்ந்த திரு ஆறுமுகம் பிள்ளை.திருமதி A.மல்லிகா அவர்களின் மகன் மேஜர் A.ஜெயந்த். வயது (37) மனைவி திருமதி.செல்லா ஜெயந்த். இவர்களுக்கு திருமணம் ஆகி நான்கு வருடம் ஆகிறது. ஆனால் குழந்தைகள் இல்லை.
மேஜர் ஜெயந்த் சிறுபிள்ளையிலிருந்து ராணுவத்தில் பணிபுரிய வேண்டும் என்ற ஆர்வம் மிகுந்தவர், இவர் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்னர் ராணுவத்தில் சேர்ந்து தற்போது மேஜராக பணியாற்றி வந்துள்ளார். மேஜர் ஜெயந்தும் அவரது மனைவி செல்லா ஜெயந்த் இருவரும் பணிபுரியும் இடத்தில் குடியிருந்து வந்துள்ளனர். ஜெயந்தின் தாய், தந்தையர் சென்னையில் குடியிருந்து வந்துள்ளனர். இந்நிலையில், அசாமில் உள்ள விமானப்படை பயிற்சி முகாமில் ஹெலிகாப்டர் பயிற்சியில் மேஜர் ஜெயந்த் மற்றும் ஆந்திர பிரதேசத்தைச் சேர்ந்த ரெட்டி ஆகியோர் ஹெலிகாப்டர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது ஹெலிகாப்டர் விமானம் விபத்துக்குள்ளாகி மேஜர் ஜெயந்த் மற்றும் ரெட்டி ஆகியோர் பரிதாபமாக பலியாகினர். இவர்களில் ஆந்திர பிரதேசத்தை சேர்ந்த ரெட்டியின் உடல் மற்றும் மேஜர் ஜெயந்த் ஆகியோரின் உடன் டெல்லி விமானப்படை தலைமை அலுவலகம் கொண்டு வரப்பட்டு அங்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் மேஜர் ஜெயந்தின் உடல் விமான மூலம் சென்னை வந்து சென்னையில் இருந்து மதுரை விமான நிலையம் வந்தடைந்த பின்னர் அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் பெரியகுளம் அருகே உள்ள ஜெயமங்கலம் கிராமத்திற்கு கொண்டு வர உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.