Homeசெய்திகள்தமிழ்நாடுபாமகவினர் மீது தடியடி நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்- அன்புமணி

பாமகவினர் மீது தடியடி நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்- அன்புமணி

-

பாமகவினர் மீது தடியடி நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்- அன்புமணி

நெய்வேலியில் நடந்த விரும்பத்தகாத நிகழ்வுகள் அனைத்துக்கும் காவல் துறையினர்தான் காரணம் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

anbumani

இதுதொடார்பாக அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடலூர் மாவட்டம் வளையமாதேவி பகுதியில் வயலில் விளைந்திருந்த பயிர்களை ராட்சத எந்திரங்களைக் கொண்டு அழித்ததை கண்டித்தும், என்.எல்.சி நிறுவனம் தமிழகத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று வலியுறுத்தியும் நெய்வேலியில் நேற்று நடைபெற்ற போராட்டத்தை தொடர்ந்து, பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த 26 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வளையமாதேவி பகுதியில் நிலத்தைத் தோண்டும் பணிகள் மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இவை இரண்டும் கடுமையாக கண்டிக்கத்தக்கவை.

பாட்டாளி மக்கள் கட்சியில் நெய்வேலியில் நேற்று நடைபெற்ற போராட்டத்தை தொடர்ந்து நடைபெற்ற தடியடி உள்ளிட்ட அரச வன்முறைகளுக்கும், அத்துமீறல்களுக்கும் பாட்டாளி மக்கள் கட்சி எந்த வகையிலும் பொறுப்பல்ல. முற்றுகைப் போராட்டம் தொடங்கியது முதல் நான் கைது செய்யப்பட்டு காவல் துறை ஊர்தியில் ஏற்றப்படும் வரை மிகவும் அமைதியாகவும், கட்டுக்கோப்புடனும் தான் நடைபெற்றன. பா.ம.க.வினர் எந்தவித விரும்பத்தகாத செயலிலும் ஈடுபடவில்லை.

பா.ம.க.வினர் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து ஒரு தொண்டரை காவல் துறையினர் கண்மூடித்தனமாக தாக்கி ஆடைகளை கிழித்து காயப்படுத்தினார்கள். அதைத் தொடர்ந்து தான் நிலைமை மோசம் அடைந்தது. இளைஞரை காவல் துறையினர் தாக்கியதற்காக காணொலி ஆதாரங்கள் உள்ளன. காவல் துறையினரின் தடியடியில் நூற்றுக்கும் மேற்பட்ட பா.ம.க.வினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நெய்வேலியில் நேற்று நடைபெற்ற விரும்பத்தகாத நிகழ்வுகள் அனைத்துக்கும் காவல் துறையினர்தான் காரணம். இதற்காக காவல் துறையினர் மீதுதான் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்க வேண்டும். அதற்கு மாறாக அப்பாவி பா.ம.க.வினரை காவல் துறையினர் கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கது. கைது செய்யப்பட்ட பா.ம.க.வினர் அனைவரும் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும். அவர்கள் மீதான வழக்குகள் திரும்பப் பெறப்பட வேண்டும். தடியடிக்கு காரணமான காவல் துறையினர் யார் என்பது அடையாளம் காணப்பட்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

அதேபோல், விளைந்த பயிர்களை அழித்து நிலத்தை கைப்பற்றும் பணிகளை நிறுத்தி வைக்க வேண்டும் என்பதுதான் ஒட்டுமொத்த தமிழக மக்களின் குரலாக உள்ளது. நெய்வேலி போராட்டத்தில் பேசிய நானும் நிலத்தை கைப்பற்றும் பணிகளை மீண்டும் தொடங்கக் கூடாது என்று வலியுறுத்தி இருந்தேன். ஆனால், மக்களின் குரலையும் மதிக்காமல், பாட்டாளி மக்கள் கட்சியின் கோரிக்கையையும் ஏற்காமல் விளைந்த நிலங்களை மீண்டும் மீண்டும் கையகப்படுத்துவது மன்னிக்க முடியாத குற்றம் ஆகும்.

Image

இதை தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள். விளைந்த பயிர்களை எந்திரங்களைக் கொண்டு அழித்து நிலத்தை கைப்பற்றும் செயலுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது. பயிர்கள் விளையும் நிலங்கள் அனைத்தையும் பறித்து, நிலக்கரி, மீத்தேன் திட்டங்களை செயல்படுத்தினால் எதிர்காலத்தில் உணவு பஞ்சம் ஏற்படும்; அரிசிக்கும், காய்கறிகளுக்கும் மக்கள் அடித்துக் கொண்டு நிற்பதை நாம் நம் கண் முன்னே பார்க்கத்தான் போகிறோம், என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி தண்டபாணி எச்சரிக்கை விடுத்திருந்தார். அதற்குப் பிறகும் நிலங்களை கையகப்படுத்தும் பணியில் தமிழக அரசு ஈடுபட்டால், உழவர்களின் முதல் எதிரி தமிழக அரசுதான், என்றுதான் கருத வேண்டியிருக்கும்.

மீண்டும் மீண்டும் தமிழக அரசுக்கு நான் வலியுறுத்துவது என்னவென்றால், உழவர்களின் உணர்வுகளை மதியுங்கள். உழவர்களை வாழ விடுங்கள் என்பதுதான். ஆனால், தமிழக அரசோ மீண்டும் மீண்டும் உழவர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டு, உழவர்களை விரக்தியின் விளிம்புக்கு விரட்டியடிக்கிறது.

Image

இதே நிலை தொடர்ந்தால், சிங்கூர் நந்திகிராமத்தில் என்ன நடந்ததோ அதுதான் இங்கும் நடக்கும் என்பதை தமிழக அரசுக்கு நான் தெரிவித்துக் கொள்கிறேன். உழவர்களின் உணர்வுகளை மதித்து என்.எல்.சி-க்கு நிலம் கையகப்படுத்தும் பணிகளை நிறுத்த வேண்டும். என்.எல்.சி நிறுவனத்தை தமிழகத்தில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்று தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

MUST READ