காவிரி டெல்டாவை அழிக்க 6 நிலக்கரி சுரங்களா? அன்புமணி ராமதாஸ்
கடலூர், அரியலூர், தஞ்சை ஆகிய மாவட்டங்களில் நிலக்கரி திட்டங்களுக்கு அரசு அனுமதி அளிக்கக் கூடாது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி ராமதாஸ், “காவிரி டெல்டாவை அழிக்க மிகப்பெரிய சூழ்ச்சி நடக்கிறது. மாநில அரசுக்கு தெரியாமல் மத்திய அரசு எப்படி அனுமதி வழங்கும்? வேளாண் மண்டலங்களில் எப்படி நிலக்கரி சுரங்கங்கள் அமைக்க முடியும்? புதிய சுரங்கம் அமைக்க அனுமதி கொடுக்க மாட்டோம் என முதலமைச்சர் அறிவிக்க வேண்டும். அல்லது முதலமைச்சர் புதிய சுரங்கங்கள் அமைக்க அனுமதிக்க மாட்டோம் என சட்டமன்ற தொடரிலேயே அறிவிக்க வேண்டும். காவிரி பாசன மாவட்டங்களை நிலக்கரி சுரங்கங்கள் வாயிலாக சீரழிப்பதற்கு ஆதரவாக இருக்ககூடாது. ஏலம் அறிவிக்கப்பட்ட 6 சுரங்க திட்டங்களில் 5 திட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் வருகிறது.
மாநில அரசுக்கு தெரியாமல் எப்படி மத்திய அரசு நிலக்கரி சுரங்க ஏலத்தை அறிவிக்கமுடியும்? ஆன்லைன் சூதாட்டத்தால் 49 பேர் உயிரிழந்ததற்கு ஆளுநரே காரணம். ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி ஒருவாரத்துக்கு மேல் ஆகிறது. ஆளுநர் ஆர்.என்.ரவி எந்த தயக்கமும் இல்லாமல் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவில் கையெழுத்திட வேண்டும். சேலம் உருக்காலை 500 ஏக்கரில்தான் உள்ளது. பயன்படுத்தாத மீதி 3,500 ஏக்கரை திரும்பப் பெற வேண்டும். வேளாண் நிதிநிலை அறிக்கையில் மேட்டூர்- சேலம் உபரிநீர் திட்டத்தை அறிவிக்காதது ஏமாற்றம் அளிக்கிறது” என்றார்.