புத்தாக்கம் செய்வோம்; பெண்மையைப் போற்றுவோம்- ராமதாஸ்
பெண்களுக்கு சமத்துவம் வழங்குவதற்காக உலகில் உள்ள அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்த வேண்டும் என்பது தான் பா.ம.க.வின் கொள்கை என அக்கட்சி நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஈடு இணையற்ற சிறப்புகளைக் கொண்ட மகளிரை பெருமைப்படுத்தும் வகையில் உலக மகளிர் நாள் மார்ச் 8&ஆம் தேதியான நாளை கொண்டாடப்படும் நிலையில், அனைத்து மகளிருக்கும் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் உளமார்ந்த மகளிர் நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மகளிர் நாள் நூற்றாண்டுகளைக் கடந்த வரலாறு கொண்டதாகும். 1789 ஆம் ஆண்டில் பிரெஞ்சுப் புரட்சியின்போது சமத்துவம், சுதந்திரத்துவம், வாக்குரிமை ஆகிய மூன்றையும் வலியுறுத்தி பாரிஸ் நகரில் பெண்கள் போராடத் தொடங்கியது தான் மகளிர் நாள் கொண்டாடப்படுவதற்கான தொடக்கம் ஆகும். அதன் பின் உலகம் முழுவதும் உள்ள மகளிர் தங்களின் கோரிக்கைக்காக குரல் கொடுத்த நிலையில் 1911 ஆம் ஆண்டில் தான் சர்வதேச மகளிர் நாளை ஐ.நா. அமைப்பு முறைப்படி அறிவித்தது.
ஒரு காலத்தில் உரிமைகளுக்காக போராட வேண்டிய நிலையில் இருந்த பெண்களுக்கு இப்போது ஓரளவு விடுதலை கிடைத்திருந்தாலும், இன்னும் சமத்துவம் கிடைக்கவில்லை. அதனால் தான் நடப்பாண்டின் மகளிர் நாளுக்கான கருப்பொருளாக,‘‘ அனைவருக்கும் டிஜிட்டல்: புத்தாக்கம் மற்றும் தொழில்நுட்பத்தின் மூலம் பாலினசமத்துவத்தை ஏற்படுத்துவோம்’’ என்ற தத்துவம் அறிவிக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு சமத்துவம் வழங்குவதற்காக உலகில் உள்ள அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்த வேண்டும் என்பது தான் பா.ம.க.வின் கொள்கை. அந்த வகையில் இந்த கருப்பொருள் வரவேற்கத்தக்கது.
அறிவியலும், தொழில்நுட்பமும் தான் அடிமைத் தளைகளை தகர்க்கக் கூடியவை. அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தால் அன்றாட வீட்டு வேலைகள் தொடங்கி அனைத்தும் எளிதாகி விட்டன. அதனால் அந்தப் பணிகளை இருபாலரும் பிரித்துச் செய்யலாம். வீட்டை ஆள்வதில் தொடங்கி நாட்டை ஆள்வது வரை அனைத்திலும் மகளிருக்கு சமத்துவமும், சம உரிமையும் வழங்கலாம். அத்தகைய கனவு சமுதாயத்தை உருவாக்க வேண்டியது ஒட்டுமொத்த சமூகத்தின் கடமை ஆகும். அந்தக் கடமையை நிறைவேற்ற உலக மகளிர் நாளான இந்த நன்நாளில் நாம் அனைவரும் உறுதியேற்போம் எனக் கேட்டுக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.