ஜெயலலிதாவை அவதூறாக பேசிய திண்டுக்கல் லியோனி மீது போலீசில் புகார்
மறைந்த முதல்வர் ஜெயலலிதா குறித்து அவதூறாக பேசிய தமிழக பாடநூல் கழக தலைவர் திண்டுக்கல் லியோனி மீது அதிமுகவினர் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர்.
இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அதிமுக மதுரை மண்டல தகவல் தொழில்நுட்ப செயலாளர் ராஜ்சத்யன், “விடியா அரசு பாதுகாப்பற்ற அரசாக மாறியுள்ளது. மேடைகளில் பெண்களை ஆபாசமாக பேசும் லியோனி, விடியா அரசின் பாடநூல் கழக தலைவராக உள்ளார். அவர் இன்றைக்கு மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாக பேசியுள்ளார். அவருக்கு கண்டனம் தெரிவிக்கின்றோம். அவரை கைது செய்து, அவர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று காவல்துறை ஆணையரிடம் கோரிக்கை வைத்துள்ளோம். மேலும் அவரை பாடநூல் கழக தலைவர் பொறுப்பில் இருந்தும் அரசு நீக்க வேண்டும்.
ஆணாதிக்க நிலைபாட்டோடு இந்த விடியா அரசு செயல்பட்டுக்கொண்டு இருக்கிறது. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று திமுக நிர்வாகிகளே கூறுகின்றனர். பெண் காவலர்களுக்கு அவர்களின் கூட்டத்திலேயே பாதுகாப்பு இல்லை. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் இன்று அதிகரித்துள்ளது. நாங்கள் எப்போதும் தரம் தாழ்ந்து பேசுபவர்கள் இல்லை. ஆனால் நடவடிக்கை எடுக்கவில்லை எனில், எங்கள் தொண்டர்களும், நிர்வாகிகளும், வீட்டை சுத்தம் செய்ய எப்படி துடைப்பம் பயன்படுகிறதோ, அதே துடைப்பத்தை கொண்டு தான் லியோனியை வரவேற்பார்கள் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்”என்று தெரிவித்தார்.