மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி சென்னை மெரினாவில் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியான நிலையில், காவல் துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்தி 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 10க்கும் மேற்பட்டோரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் கூறப்படுக்கிறது. இதனால் உயிரிழப்புகள் அதிகரிக்கலாம் என்கிற அச்சம் நிலவுகிறது. பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படுமென முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் பெற்றோரை இழந்து வாடும் குழந்தைகளில் கல்விச் செலவை ஏற்பதாக அதிமுக அறிவித்துள்ளது.
என்னதான் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கினாலும், பூரண மதுவிலக்கே இதுபோன்ற உயிரிழப்புகளுக்கு தீர்வாக இருக்கும் என பாமக உள்ளிட்ட கட்சிகளும் , சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தி வருகின்றன. ஆகையால் பூரண மதுவிலக்கை வலியுறுத்தி, ஜல்லிக்கட்டு போராட்டம் போன்று மீண்டும் ஓர் புரட்சி போராட்டம் நடத்த வேண்டும் என சமூக வலைதளங்களில் தகவல் பரவி வந்தது.
அத்துடன் இன்று( ஜூன் 22) பூரண மதுவிலக்கை வலியுறுத்தி சென்னை மெரினாவில் போராட்டத்தை தொடங்குவோம் என அழைப்பு விடுக்கும் விதமான செய்திகள் சமூகவலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மெரினாவில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கலங்கரை விளக்கம் முதல் கண்ணகி சிலை வரை மொத்தம் 150 போலீஸார் தயார் நிலையில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளனர். எவரெனும் போராட்டம் நடத்த முயன்றால் அவர்களை கைது செய்யவும் திட்டமிட்டுள்ளனர்.