விஜயலட்சுமியை மேஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தி வாக்குமூலம் பெற முடிவு
சீமான் மீதான புகாரில் நடிகை விஜய லட்சுமியை மேஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தி வாக்குமூலம் பதிவு செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர்.
நடிகை விஜயலட்சுமி 2011ல் சீமானுக்கு எதிராக கொடுத்த புகாரை அப்போதே திரும்பப் பெற்றுவிட்டார். அதே பிரச்சனைக்கு மீண்டும் அவர் தற்போது கொடுத்துள்ள புகாரின்பேரில், சென்னை, ராமாபுரம் காவல் நிலையத்தில் நடிகை விஜயலட்சுமியிடம் போலீசார் நேற்று விசாரணை மேற்கொண்டனர். சீமான் மீதான புகார் குறித்து 6 மணி நேரத்திற்கும் மேலாக துணை ஆணையர் உமையாள் விசாரணை நடத்தினார். அப்போது சீமான் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, காவல் நிலையத்தை விட்டு வெளியே செல்ல நடிகை விஜயலட்சுமி மறுத்துவிட்டார். அதன்பின் போலீசார் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வீட்டிற்கு அனுப்பிவைத்தனர்.
நேற்று 8 மணி நேரம் நடந்த விசாரணையில் ஆடியோ ஆதாரங்கள், வங்கி பண பரிவர்த்தனை, ஹோட்டல் அறையில் தங்கிய ஆதாரங்களை விஜய லட்சுமி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் விஜயலட்சுமி பணம் கொடுத்தது, சீமானுடன் திருமணம் நடந்ததற்கு மற்றும் ஹோட்டல் அறையில் இருந்ததற்கு ஆதாரம் அளித்ததாக தெரியவந்துள்ளது. இந்நிலையில் விஜய லட்சுமி அளித்த புகாரில் 2011ம் ஆண்டு ஏற்கனவே வளசரவாக்கம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது சீமான் மீதான புகாரில் நடிகை விஜய லட்சுமியை மேஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தி வாக்குமூலம் பதிவு செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர்.