ஆம்ஸ்ட்ராங் கொலையில் அரசியல் சதி திட்டம் உள்ளதாக திருமாவளவன் பகீர் தகவல்
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலையில் அரசியல் சதி திட்டம் உள்ளதாகவும், ஆம்ஸ்ட்ராங்- ஆருத்ரா- பா.ஜ.க என முக்கோண தொடர்பு இருப்பதாகவும் விசிக தலைவர் திருமாவளவன் திடுக்கிடும் தகவலை தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து கோரிக்கை மனு அளித்த பின் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன்,
ஆம்ஸ்ட்ராங் கொலையில் அரசியல் சதி திட்டம் உள்ளதாக சந்தேகம் உள்ளதாக கூறினார்.
மேலும், ஆம்ஸ்ட்ராங் கொலையில் சி பி ஐ விசாரணை வேண்டுமென பாஜகவின் குரலாக உள்ளதாக கூறிய அவர், ஆருத்ரா கோல்ட் நிறுவனத்திற்கும் பாஜகவை சார்ந்த சிலருக்கும் உள்ள தொடர்பு குறித்து ஒரு வருடத்திற்கும் மேலாக பேசப்பட்டு வருவதாகவும், அதில் சம்பந்தப்பட்ட நபர்கள் பாஜகவின் பொறுப்பில் இருக்கிறார்கள் என்றும், ஆம்ஸ்ட்ராங் கொலையில் ஆருத்ரா விவகாரமும் பேசப்படுவதாகவும் குறிப்பிட்டார்.
நீட் தேர்வு தொடர்பாகவும் முதலமைச்சரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், நீட் தேர்வில் ஊழல் முறைகேடுகள் நடந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், அதனை மூடி மறைக்க பாஜக முயற்சி செய்து வருகிறது என்றும், நீட் தேர்வு விவகாரத்தில் அனைத்து கட்சி கூட்டம் கூட்டி தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
அரசு மருத்துவர்கள் மேற்படிப்பிற்கான சேவை ஒதுக்கீடு ரத்து – திமுக அரசுக்கு சீமான் கண்டனம்
அதேபோல், சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் நபர்களை கண்காணித்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியை விமர்சிப்பது அரசியல் ஆதாயத்தின் உச்சமாக உள்ளதோடு, சட்டம் ஒழுங்கை காப்பாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
ஆம்ஸ்ட்ராங் உடலை பொதுமக்கள் பார்வைக்காக அரசு பள்ளியில் வைக்க இடம் கொடுத்ததோடு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கொடுத்த முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்ததாக கூறிய அவர், ஆம்ஸ்ட்ராங் கொலையில் திட்டம் தீட்டியவர்கள் பின்னால் இருந்து உதவியவர்கள் என அனைவரையும் கைது செய்ய வேண்டும் எனவும், ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் சம்பந்தப்பட்டயாராக இருந்தாலும் யார் தவறு செய்திருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் உறுதிப்பட தெரிவித்ததாகவும் கூறினார்.
சென்னை காவல் ஆணையாளர் நேர்மையான முறையில் விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தி இருப்பதோடு, கூட்டணியில் இருந்தாலும் பல கோரிக்கைக்கு போராடி வருகிறோம், மூன்று ஆண்டுகளில் பல போராட்டம் நடத்தினோம், கள்ளக்குறிச்சி விவகாரத்தில் கூட ஆர்ப்பாட்டம் நடத்தினோம், வேங்கைவயல் விவகாரத்தில் கூட உடனே போராட்டம் நடத்தினோம், நாங்கள் போராட்டம் நடத்துவது கூட திமுகவுக்கு வருத்தம் இருந்தாகவும் தெரிவித்தார்.