மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தமிழகத்தில் இன்று (ஏப்ரல் 19) காலை 07.00 மணிக்கு தொடங்கிய நிலையில், அரசியல் கட்சிப் பிரமுகர்கள், வேட்பாளர்கள், அமைச்சர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர்.
‘மக்களவைத் தேர்தல் 2024’- தமிழகத்தில் தொடங்கியது வாக்குப்பதிவு!
அந்த வகையில், சென்னை சாலிகிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் முன்னாள் ஆளுநரும், வேட்பாளருமான டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன், தனது குடும்பத்துடன் சென்று வாக்களித்தார். அப்போது, அங்கு வந்திருந்த தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்தை ஆரத்தழுவினார்.
திருச்சி தில்லை நகரில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு வாக்களித்தார். திருச்சி கிராப்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வாக்களித்தார். தூத்துக்குடியில் சமூக நலன், மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் வாக்குச் செலுத்தினார்.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் கள்ளிமந்தயத்தில் சிஎஸ்ஐ பள்ளியில் அமைச்சர் சக்கரபாணி வாக்குச் செலுத்தினார். கடலூர் முட்டம் கிராமத்தில் உள்ள பள்ளியில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வாக்களித்தார்.
தேனி மாவட்டம், கம்பம் அருகே நாராயணதேவன்பட்டியில் தி.மு.க. வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் வாக்களித்தார். அரக்கோணம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பா.ம.க வேட்பாளர் கே.பாலு, தனது வாக்கைச் செலுத்தினார்.
முதல் நபராக வாக்களித்த நடிகர் அஜித்குமார்!
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸின் மனைவியும், தருமபுரி மக்களவைத் தொகுதியின் பா.ம.க. வேட்பாளருமான சவுமியா அன்புமணி, திண்டிவனம் மாரியம்மன் கோயில் தெருவில் உள்ள மரகதாம்பிகை பள்ளியில் தனது வாக்கைச் செலுத்தினார். அதேபோல், கரூர் தொகுதிக்குட்பட்ட அரவக்குறிச்சி தொட்டம்பட்டியில் பா.ஜ.க.வின் மாநில தலைவரும், கோவை தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளருமான அண்ணாமலை தனது வாக்கை பதிவுச் செய்தார்.