ஆவின் பாலில் கலப்படம்- பொன்னுசாமி பகீர் குற்றச்சாட்டு
தமிழ்நாட்டில் நாள்தோறும் 11 லட்சம் லிட்டர் ஆவின் பால் கலப்படம் செய்யப்பட்டே விற்பனையாகி வருகிறது என்று தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்க தலைவர் பொன்னுசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பொன்னுசாமி,
ஆவின் நிறுவனத்தை அழிக்கும் செயல்பாடு முன்னெடுக்கபடுகிறது என்றார். ஆவின் நிறுவனம் மே-2021-ல் இருந்து செப்டம்பர் 2022-க்குள் பால் தயாரிப்புக்கு பயன்படுத்தப்படும்.
22 ஆயிரத்து 410 டன் பால் பவுடரையும், வெண்ணையையும் விற்பனை செய்து முடித்துவிட்டனர் என்றும் அதனைதொடர்ந்து ஆகஸ்ட் 2022-ம் ஆண்டு முதல் மகாராஷ்டிரா மாநிலத்தில் புதிதாக தொடங்கப்பட்ட பால் கூட்டுறவு நிறுவனத்திடம் பால்பவுடரை கிலோ 220 ரூபாய்க்கும் வெண்ணையை 327 ரூபாய்க்கு கொள்முதல் செய்துள்ளனர் என்றும் புகார் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் 500 கோடி ரூபாய் வரை முறைகேடு நடைபெற்றிருக்க வாய்ப்புள்ளதாக பொன்னுசாமி பகீர் குற்றச்சாட்டை வைத்துள்ளார்.
தரம் குறைந்த வெண்ணைய், தரம் குறைந்த பால் பவுடர் ஆகியவற்றை கலந்து, தரமற்ற பாலை ஆவின் நிறுவனம் விற்பனை செய்கின்றது என்றும் பொன்னுசாமி குற்றஞ்சாட்டினார்.
உணவு பாதுகாப்புத் துறை பாலின் தரத்தை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என வலியுறுத்திய அவர், மறைமுகமான கலப்படம் ஆவினில் நடைபெறுவதாக புகார் தெரிவித்தார்.
மேலும், தரமான பாலை பொது மக்களுக்கு விற்பனை செய்ய வேண்டிய பொறுப்பு, அரசுக்கு உள்ளது என்று பொன்னுசாமி கூறினார். இதனால் தற்போது பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.