புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே அரசர்குளம் பகுதியை சேர்ந்தவர் ஜோதிமீனா (26) நிறை மாத கர்ப்பிணியான இவர் கடந்த 13-ம் தேதி அறந்தாங்கி அரசு மகப்பேறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டு பெண் குழந்தை பிறந்துள்ளது. ஆனால் சிறிது நேரத்தில் ஜோதிமீனா உயிரிழந்துள்ளார்.
அதே போன்று கூத்தாடிவயல் பகுதியை சேர்ந்த ராஜலட்சுமி என்பவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சுகபிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. ஆனால் ராஜலட்சுமிக்கு உதிரப்போக்கு அதிகமாக காணப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து பணியில் இருந்த மருத்துவர்கள் இரத்தப்போக்கை நிறுத்துவதற்காக கர்ப்பப்பையை நீக்கியுள்ளனர். மேலும் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு உறவினர்கள் அனுமதி இல்லாமல் அவசர அவசரமாக ஆம்புலன்சில் புதுக்கோட்டைக்கு அனுப்பிவிட்டு உறவினர்களை இருசக்கர வாகனத்தில் வர சொன்னதாக உறவினர்கள் கூறினர்.
புதுக்கோட்டை ராணி யார் மருத்துவமனையில் ராஜலெட்சுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தவறான சிகிச்சை அளித்ததால் தான் ராஜலட்சுமி மற்றும் ஜோதி மீனாவிற்கு இந்த நிலை என்று கூறி சம்மந்தப்பட்ட உறவினர்கள் மருத்துவமணை வளாகம் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலை மறியலால் அறந்தாங்கி பட்டுக்கோட்டை சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.