புதுச்சேரியில் பிளஸ் 2 தேர்வு- தேர்ச்சி சதவீதம் 92.67%
புதுச்சேரியில் பிளஸ்2 தேர்வு முடிவுகள் இன்று வெளியானது, தேர்வு முடிவுகளை முதல்வர் ரங்கசாமி, சட்டப்பேரவை அலுவலகத்தில் வெளியிட்டார்.
பின்பு செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் ரங்கசாமி, “புதுவை மற்றும் காரைக்காலில் தமிழக அரசு பாடத்திட்டம் நடைமுறையில் உள்ளது. அனைத்து பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் 92.67 சதவீதம். கடந்த ஆண்டு 96.13 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். கடந்த ஆண்டைவிட 3.46 சதவீதம் தேர்ச்சி வீதம் குறைந்துள்ளது. புதுவை, காரைக்காலில் அரசு பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் 85.38. கடந்த மார்ச் மாதம் நடந்த பிளஸ்2 பொதுத்தேர்வில் புதுவை, காரைக்காலை சேர்ந்த 6 ஆயிரத்து 682 மாணவர்களும், 7 ஆயிரத்து 542 மாணவிகளும் என மொத்தம் 14 ஆயிரத்து 224 பேர் தேர்வு எழுதினர்.
இதில் புதுவை அரசு, தனியார் பள்ளிகளை சேர்ந்த 6 ஆயிரம் மாணவர்கள், 7 ஆயிரத்து 182 மாணவிகள் என மொத்தம் 13 ஆயிரத்து 182 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். புதுவையில் உள்ள அரசு பள்ளி மாணவர்களில் 85.88 சதவீதம், காரைக்காலில் 83.66 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். புதுவை, காரைக்காலில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் 154 உள்ளது. இதில் 65 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன. புதுவையில் 56 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன. காரைக்காலில் 9 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன.
புதுவை, காரைக்காலில் மொத்தம் உள்ள 53 அரசு பள்ளிகளில் புதுவை சுல்தான்பேட்டையை சேர்ந்த அரசு பள்ளி 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது. புதுவை, காரைக்காலில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஆங்கிலத்தில் 1, இயற்பியலில் 6, வேதியியலில் 80, உயிரியலில் 38, கணிப்பொறி அறிவியலில் 132, கணிதத்தில் 8, தாவரவியலில் 6, விலங்கியலில் 4, பொருளியலில் 37, வணிகவியலில் 157, கணக்கு பதிவியலில் 138, வணிக கணிதத்தில் 39, வரலாற்றில் 1, கணிப்பொறி பயன்பாட்டில் 144 பேர் என மொத்தம் 791 மாணவர்கள் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். கடந்தாண்டை விட இம்முறை முழு பாடத்திட்டம் இருந்ததால் தேர்ச்சி விகிதம் குறைந்துள்ளது” என்றார்.