Homeசெய்திகள்தமிழ்நாடுஅம்பத்தூரில் நலத்திட்ட உதவி பெறுவதில் பொதுமக்கள் இடையே தள்ளுமுள்ளு... அமைச்சர் பங்கேற்ற நிகழ்ச்சியில் பரபரப்பு

அம்பத்தூரில் நலத்திட்ட உதவி பெறுவதில் பொதுமக்கள் இடையே தள்ளுமுள்ளு… அமைச்சர் பங்கேற்ற நிகழ்ச்சியில் பரபரப்பு

-

அம்பத்தூரில் சுகாதாரத்துறை அமைச்சர் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் நலத்திட்ட உதவி பெறுவதில் பொதுமக்கள் இடையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை அம்பத்தூரில் திமுக பவள விழா ஆண்டின் முப்பெரும் விழாவையொட்டி மாபெரும் மருத்துவ முகாம் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. அம்பத்தூர் மண்டல மாமன்ற உறுப்பினர் சாந்தகுமாரி தலைமையில் இந்த முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் சிறப்பு அழைப்பாளராக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், இந்து சமய அறநிலையத் துறை மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சி குழும அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்டோர் கலந்துகொண்டு மருத்துவ முகாமினை தொடங்கி வைத்தனர்.

அமைச்சர் மா.சுப்ரமணியன் மருத்துவ முகாமினை துவங்கி வைத்தப்பின்னர் நலத்திட்ட உதவிகள் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் அமைச்சர்கள் புறப்பட்டு சென்ற பின்னர் நலத்திட்ட உதவிகளை பெற பயனாளிகள் ஒருவரை ஒருவர் முந்திக்கொண்டபோது கூட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. கூட்டத்தை கட்டுக்குள் கொண்டு வர மாமன்ற உறுப்பினர் சாந்தகுமாரி முயற்சித்து கொண்டிருந்தார்.

அப்போது வீடியோ எடுத்துக்கொண்டிருந்த செய்தியாளர்களை அதட்டி வீடியோ எடுக்கக்கூடாது என கூறி அங்கிருந்து அப்புறப்படுத்தினர். குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டுமே பொருட்களை வழங்க திட்டமிட்டிருந்த நிலையில் முறையான ஏற்பாடு செய்யப்படாததால் கூட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டு சற்று அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

MUST READ