தமிழகத்தில் அடுத்த மாதத்தில் இருந்து மாவட்ட வாரியாக புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்படும் என உணவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னை சேத்பட்டில் ரோட்டரி சங்கம் சார்பாக பள்ளிகளுக்கு இடையேயான “அனைத்து புற்றுநோய் கண்காட்சி” போட்டியின் பாராட்டு விழா நிகழ்ச்சியில் கூட்டுறவுத்துறை மற்றும் உணவுத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக பங்கேற்கேற்று மாணவ மாணவியர்க்கு பரிசுகளை வழங்கினார்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க தமிழக அரசு பல்வேறு தொடர் ஆய்வுகளை மேற்கொண்டு வருவதாகவும் அதில் கடந்த ஒரு வருடத்தில் 5631 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அதில் 6675 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.அது தொடர்பாக 6.98 கோடி மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றார்.
1002 வாகனங்களும் பறிமுதல் செய்துள்ளோம் என்று கூறினார்.தமிழ்நாட்டில் 2.24 கோடி குடும்பங்கள் ஏற்கனவே ரேஷன் அட்டை வைத்துள்ளனர்.இவர்களுடன் புதிதாக விண்ணப்பித்த 2.8 லட்சம் பேருக்கு அடுத்த மாதம் முதல் புதிய அட்டை வழங்கும் பணி மாவட்ட வாரியாக தொடங்கும் என்றார். ரேஷனில் பாமாயில் மற்றும் பருப்பு வழங்குவதில் தேர்தல் காரணமாக சற்று தாமதம் ஏற்பட்டது.வரும் மாதத்திற்கான டெண்டர் 29 தேதி இறுதி செய்யப்படும் என்றார்.அதன் பிறகு மூன்று மாதத்திற்கு ஒரு முறை முன்கூட்டியே டெண்டர் விட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அடுத்த மாதத்திலிருந்து முழுமையாக ரேஷன் பொருட்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.