முதலமைச்சர் அறிவுறுத்தலின் பேரில் மதுரையில் கனமழையால் தேங்கியுள்ள மழைநீரை அகற்றும் பணிகளை அமைச்சர் மூர்த்தி விடிய விடிய ஆய்வு மேற்கொண்டார்.
மதுரை மாநகரில் நேற்று பிற்பகல் முதல் பலத்த மழை கொட்டித் தீர்த்தது. 15 நிமிடங்களில் 45 மி.மீ., மழை பதிவாகியது. கனமழை காரணமாக பல்வேறு குடியிருப்பு பகுதிகளில் மழை நீரானது சூழ்ந்துகொண்டது. குறிப்பாக செல்லூர் கட்டபொம்மன் நகர், சாஸ்திரி சாலை, குலமங்கலம் மெயின் ரோடு, பந்தல்குடி கால்வாய், செல்லூர் 50 அடி சாலை, ஆத்திகுளம், காந்திபுரம், , முல்லை நகர்,
அல்அமீன் நகர், ஒத்தக்கடை உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மழைநீரை அகற்றும் பணிகளை தீவிரப்படுத்த அமைச்சர் மூர்த்தி மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு அறிவுறுத்தினார். தொடர்ந்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வீடியோ காண்பரன்சிங் மூலம் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு மழைநீர் அகற்றும் பணிகளை தீவிரப்படுத்த உத்தரவிட்டார்.
அதன் பேரில், மழைநீர் சூழ்ந்த பகுதிகளில் அமைச்சர் மூர்த்தி, மாவட்ட ஆட்சியர் சங்கீதா, மாநகராட்சி ஆணையாளர் தினேஷ்குமார் ஆகியோர் நேரில் பார்வையிட்டு, மழைநீரை உடனடியாக அகற்ற அறிவுறுத்தினார். தொடர்ந்து ஆத்திகுளம், காந்திபுரம் பகுதியில் நடைபெறும் பணிகளை பார்வையிட்டு, அங்குள்ள மாநகராட்சி ஆதரவற்றோர் இல்லத்தில் உள்ளவர்களுக்கு தேவையான வசதிகளையும் செய்து தர அறிவுறுத்தினார். மேலும், தண்ணீர் சூழ்ந்த பகுதியில் இருந்த மக்களை தனியார் மண்டபத்தில் தங்க வைப்பதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டனர்.
உயர்நீதிமன்ற மதுரை அமர்வு சுற்றுச்சுவரின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது நள்ளிரவில் அந்த இடத்தை பார்வையிட்டு உடனடியாக அதனை சரி செய்வதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு அமைச்சர் கேட்டுக் கொண்டார். இதேபோல், கோரிப்பாளையம், கான்சாபுரம் அருகேயுள்ள கால்வாய் வழியாக வைகை ஆற்றிற்கு மழைநீர் கொண்டு செல்லும் பணிகளையும் அமைச்சர் பார்வையிட்டர்.
தொடர்ந்து செய்தியாளிடம் பேசிய அமைச்சர் மூர்த்தி, மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்ததன் காரணமாக பெரும் வெள்ள சேதம் தடுக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தார். மேலும் அதிகப்படியான மழையானது பெய்ததின் காரணமாக மாநகராட்சி ஒட்டியுள்ள கண்மாய்கள் முழுவதுமாக நிரம்பியுள்ளதாகவும், அதனால் தாழ்வான ஒரு சில பகுதிகளில் மட்டும் மழை நீரானது வீடுகளைச் சூழ்ந்துள்ளதாக தெரிவித்தார். மழைநீரை உடனடியாக அகற்றவும், குடியிருப்பில் தண்ணீர் சூழ்வதை தடுப்பதற்கு உரிய நடவடிக்கையை எடுத்து வருவதாகவும், மழை நீரை அகற்றுவதில் போர்க்கால அடிப்படையில் அனைவரும் செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.