தமிழகத்தில் குற்றவியல் நீதிமன்றங்களில் காலியாக உள்ள குற்றவியல் வழக்கறிஞர்கள் நியமனத்தில் விரைந்து நடவடிக்கை எடுத்த தமிழக அரசுக்கு, உயர்நீதிமன்ற மதுரை கிளை பாராட்டு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் குற்றவியல் நீதிமன்றங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது தொடர்பான பல்வேறு வழக்குகளை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி கே.கே.ராமகிருஷ்ணன் விசாரித்து வருகிறார். கடந்த மாத விசாரணையின்போது
பெரும்பாலான குற்றவியல நீதிமன்றங்களில் அரசு வழக்கறிஞர் பணியிடங்கள் காலியாக இருப்பது தெரியவருவதாகவும், அவ்வாறு இருந்தால் குற்றவியல் நீதி பரிபாலன முடங்கும் நிலை ஏற்படும் என்றும் நீதிபதி கே.கே.ராமகிருஷ்ணன் தெரிவித்தார். மேலும் தமிழகம் முழுவதும் குற்றவியல் நீதிமன்றங்களில் எத்தனை அரசு வழக்கறிஞர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளது?, காலியிடங்களை நிரப்ப என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என அறிக்கை தாக்கல் செய்ய, உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஒத்திவைத்திருந்தார்.
இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது தமிழக அரசின் தலைமை குற்றவியல் வழக்குரைஞர் அசன்முகமது ஜின்னா ஆஜராகி வாதிட்டார். அப்போது, உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்திரவிற்கிணங்க, காலியாக இருந்த 14 அரசு கூடுதல் குற்றவியல் வழக்குரைஞர் பணியிடங்களை நிரப்பப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் காலியாக உள்ள 5 குற்றவியல் துறை துணை இயக்குநர் பணியிடங்களையும் 2003ஆம் ஆண்டு அரசு வெளியிட்டுள்ள விதிகளின்படி நிரப்ப உரிய நடவடிக்கையை அரசு எடுத்து வருவதாகவும் அசன்முகமது ஜின்னா தெரிவித்தார்.
அப்போது, நீதிபதி கே.கே.ராமகிருஷ்ணன் நீதிமன்ற உத்தரவின்படி குறுகிய காலத்திற்குள் காலியாக உள்ள குற்றவியல் வழக்குரைஞர் பணியிடங்களை நிரப்ப உரிய நடவடிக்கை மேற்கொண்ட தமிழக அரசுக்கு பாராட்டுகளை தெரிவித்தார். மேலும் துணை இயக்குநர் பதவி உயர்வினால் ஏற்படும் பணியிடங்களையும், ஒரு மாதத்திற்குள் நிரப்ப அரசின் அறிவுரையை பெற்று நீதிமன்றத்திற்கு தெரிவிக்குமாறு உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஒத்திவைத்தார்.