ஜாதகம் பார்ப்பதும் சாமியாரிடம் செல்வதும் ஒரு வகையான போதை பழக்கமே. சுயமரியாதை தன்மானத்துடன் தலை நிமிர்ந்து வாழ வேண்டும் என்றால் போதை இல்லாத மனிதனாக வாழ வேண்டும் தேனியில் முன்னாள் தலைமை செயலாளர் இறையன்பு பேச்சு.
தேனி மாவட்ட மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை சார்பில் புதியதோர் உலகம் செய்வோம் என்ற தலைப்பில் போதைக்கு எதிரான மாணவ தூதுவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு கருத்தரங்கு இன்று நடைபெற்றது. தேனி அருகே வடபுதுப்பட்டியில் உள்ள தனியார் கல்லூரி ஆடிட்டோரியத்தில் மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் தலைமை செயலர் இறையன்பு பங்கேற்று போதை பொருள் தடுப்பு குறித்து மாணவ – மாணவிகள் மத்தியில் பேரூரையாற்றினார். அப்போது பேசிய இறையன்பு, போதை என்பது மானுட சமுதாயத்தை சீரழிக்கும். பள்ளிகளை சுற்றியுள்ள பகுதிகளில் போதை பொருள் விற்பனை செய்யப்பட்டால் அதில் உள்ள வசீகரத்தினால் மாணவ – மாணவிகள் தீய பழக்க வழக்கத்திற்கு அடிமையாகிவிடுவர் என்பதால் தான் தமிழக அரசு பள்ளிகளுக்கு அருகில் போதை பொருட்களை விற்பனை செய்வதற்கு தடை விதித்துள்ளனர்.
இந்த போதை பழக்கத்தினால் முதலில் நமக்கு விரையமாவது நேரம் தான். எனவே நேரத்தின் அருமை கருதி நீங்களும் சரி, உங்களது நண்பர்களும் போதை பழக்கத்திற்கு ஆளாக கூடாது. போதை பழக்கத்தினால் இரண்டாவதாக பணம் விரையமாகிறது. சிறுக சிறுக சேமித்து வைத்த பணத்தை நாம் இழக்கிறோம். ஆரம்பத்தில் சிறிது அளவு பணம் தான் போதைக்கு செலவு செய்கிறோம் என்று தோன்றும் பின்னாளில் தான் தெரியும் வாழ்க்கைக்கு தேவையான அனைத்து பணத்தையும் நாம் இழந்துவிடுவோம் என்று. அடுத்ததாக நமது உடல் நலமும் முழுவதுமாக பாதிக்கப்படும். ஆரம்பத்தில் நாம் வலுவாக இருக்கிறோம் என்ற எண்ணம் தோன்றும் பின்னர் நாளடைவில் உடலில் உள்ள நரம்புகள் தளர்ச்சி அடையும் இதயம் பாதிப்படையும், எழும்புககள் வலு இழக்கும், சிறுநீரகங்கள் செயல் இழக்கும்.
நீங்கள் சுயமரியாதையோடு இருக்க வேண்டும் என்றால்? தன்மானத்தோடு இருக்க வேண்டும் என்றால்? தலைநிமிர்ந்து வாழ வேண்டும் என நிணைத்தால் ஒரு போதும் போதை பொருட்களுக்கு அடிமையாகாதீர்கள் . போதை பொருட்களுக்கு அடிமையானவர்களை இந்த சமூகம் புறக்கணிக்கும், யாரும் நம்ப மாட்டார்கள் குடிகாரன் பேச்சு விடிஞ்சால் போச்சு.
தற்போது கைபேசி இல்லாமல் யாரும் இல்லை எந்த நேரமும் அதில் மூழ்கி கிடக்கின்றனர், அதை வைத்து விளையாடுகின்றனர் சாகும் போது கூட கைபேசியை பார்க்க வேண்டும் என்ற நிலை வந்துவிட்டது. பலருக்கு பணி செய்வது போதை, முகத்தை பொழிவுடன் வைத்துக்கொள்ள வேண்டும் என்ற போதை. சிலர் அடிக்கடி ஜாதகம் பார்த்துக் கொண்டே இருப்பார்கள் நமக்கு நல்ல காலம் பிறக்காதா என்று ஜாதகம் பார்ப்பார்கள் இது ஒரு வித போதை, சிலர் சாமியார்களை தேடிக்கொண்டே இருப்பார்கள் இது ஒரு போதை. சிலருக்கு பணத்தின் மேல் போதை. பணத்தை சேமித்து கொண்டே இருப்பார்கள், மற்றவர்களின் பணத்தையும் சேர்த்து சேகரிப்பார்கள். சிலர் ஆன்லைன் பொருட்களை வாங்கி சோகரிப்பார்கள், அந்த பொருள் அவர்களுக்கு தேவை இல்லை என்றாலும் அதை வாங்குவார்கள் இதுவும் ஒரு போதை என்று பேசினார்.
முன்னதாக போதைப் பொருட்களால் ஏற்படுத்தும் பாதிப்பு குறித்து மாணவர்களால் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் போதைப் பொருள் தடுப்பு குறித்த போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
கரம் கோர்த்தவர்களை கதற விடும் பாஜக… நிதிஷ் குமாருக்கு டஃப் கொடுக்கும் மோடி