கள்ளக்குறிச்சி கருணாபுரம் சாராய வியாபாரி கூலி தொழிலாளர்களுக்கு தொடர்ந்து கடன் கொடுத்து சாராயம் வியாபாரம் செய்து வந்ததால் எத்தனை உயிரிழப்பு என உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து 47 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில் இந்த கள்ள சாராயம் உயிரிழப்பு தொடர்பாக பிரபல சாராய வியாபாரிகள் கன்னுக்குட்டி என்கின்ற கோவிந்தராஜ் அவருடைய மனைவி விஜயா, தம்பி சின்னதுரை ஆகிய மூன்று பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்து உள்ளனர்.
இந்த நிலையில் கள்ள சாராயம் குடித்து சேலம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விஜயன் (57) மற்றும் ராஜேந்திரன் (55) ஆகியோரின் சடலம் நேற்று இரவு கருணாபுரம் கொண்டுவரப்பட்டது. இருவரின் சடலத்திற்கு உறவினர்கள் அஞ்சலி செலுத்தி வரும் நிலையில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் கூறிய போது இந்த பகுதியில் தொடர்ந்து கள்ள சாராயம் விற்பனை செய்து வந்தவர்கள் மீது பலமுறை புகார் அளித்தும் காவல்துறை அதிகாரிகள் இவர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், இவர்கள் வெளியே வந்தவுடன் புகார் தெரிவித்தவர்களை மிரட்டி வந்ததால் இந்தப் பகுதியை சேர்ந்தவர்கள் அச்சத்துடன் இருந்து வந்ததாகவும், உயிரிழந்த அனைவரும் கூலி தொழிலாளிகள் என்பதால் அவர்களுக்கு கிடைக்கும் பணத்தை வைத்து ரூ.50 க்கு குறைந்த விலையில் கிடைக்கும் கள்ள சாராயத்தை வாங்கி குடித்து வந்துள்ளனர்.
மேலும் தினந்தோறும் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர்கள் தங்களிடம் பணம் இல்லை என கூறினாலும் அவர்களுக்கு சாராய வியாபாரிகள் கடன் கொடுத்து சாராயம் விற்பனை செய்துள்ளனர். இதனால் தங்களிடம் பணம் இல்லை என்றாலும் தொடர்ந்து கள்ள சாராயம் குடித்து வந்ததாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
சாராயம் குடித்து அதன் மூலம் அடிமையானவர்களை கடன் கொடுத்து தொடர்ந்து வாடிக்கையாளர்களாக வைத்துக் கொண்டு இந்த சாராய வியாபாரத்தை செய்து வந்துள்ளனர். கள்ள சாராயம் விற்பனை செய்தவர்கள் கடன் கொடுக்காமல் இருந்திருந்தால் இத்தனை உயிரிழப்புகள் ஏற்பட்டு இருக்காது என்றும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.