ரூ.30 கோடி செலவில் புனரமைக்கப்பட்ட கிண்டி சிறுவர் இயற்கை பூங்காவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்து, வனப் பகுதிகளில் ஏற்படும் காட்டுத் தீயை தடுப்பதற்காக 9 அதிநவீன வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
சென்னை கிண்டியில் அமைந்துள்ள சிறுவர் பூங்காவில்
சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை சார்பில் ரூ.30 கோடி செலவில் புனரமைக்கப்பட்டு, கிண்டி சிறுவர் இயற்கை பூங்கா என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் புனரமைக்கப்பட்ட கிண்டி பூங்கா முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். மேலும், ஒருங்கிணைந்த யானைகளின் கணக்கெடுப்பு- 2024 அறிக்கையையும் வெளியிட்டார்.
வனப் பகுதிகளில் ஏற்படும் காட்டுத் தீயை தடுப்பதற்காக 9 அதிநவீன வாகனங்களையும் கொடியசைத்து பயன்பாட்டிற்காக தொடங்கி வைத்தார்.தொடர்ந்து கிண்டி சிறுவர்கள் இயற்கை பூங்காவில் வேடந்தாங்கல் பறவைகள் இருப்பிடத்தை திறந்துவைத்து, பூங்காவில் ஏற்படுத்தப்பட்டுள்ள மேம்படுத்தப்பட்ட பல்வேறு வசதிகளை எலக்ட்ரிக் வாகனத்தில் சென்று முதலமைச்சர் பார்வையிட்டார்.
இந்த நிகழ்வின்போது உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம், வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா, மேயர் பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.