Homeசெய்திகள்தமிழ்நாடுகள்ளச்சாராய விவகாரம் : ட்ரெண்டிங்கில் #Resign_Stalin

கள்ளச்சாராய விவகாரம் : ட்ரெண்டிங்கில் #Resign_Stalin

-

கள்ளக்குறிச்சி விஷச் சாராய உயிரிழப்புகளுக்கு பொறுப்பேற்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவி விலக வலியுறுத்தி #Resign_Stalin என்கிற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது.

கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்தி அடுத்தடுத்து பலர் உயிரிழந்து வரும் சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளதோடு, ஒட்டுமொத்த இந்தியாவையும் கள்ளக்குறிச்சியின் பக்கம் திரும்பிப்பார்க்க வைத்துள்ளது. விஷ சாராயம் அருந்திய நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு அடுத்தடுத்து வாந்தி, வயிற்றுப்போக்கு, வயிற்றெரிச்சல், கை-கால் மருத்துபோதல், கண் பார்வை மங்குதல் போன்ற பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து பலரும் அருகிலுள்ள கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். சிலர் மேல் சிகிச்சைக்காக பல்வேறு மருத்துவமனைகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர்.

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 46 பேரும், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் 17 பேரும், சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 31 பேரும், விழுப்புரம் மருத்துவமனையில் ஒருவரும் என 95 நபர்கள் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டது. இவர்களில் இதுவரை 39 பேர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்திருக்கின்றனர்.

அதாவது கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 24 பேரும், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் 3 பேரும், சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 8 பேரும், விழுப்புரம் மருத்துவமனையில் 4 பேரும் என மொத்தமாக இதுவரை 39 நபர்கள் உயிரிழந்த இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் உடனடியாக தமிழக முதல்வர் தலையிட்டு சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட மதுவிலக்கு சம்பந்தப்பட்ட அனைத்து காவலர்களையும் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். மேலும் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், எ.வ.வேலு ஆகியோர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். அத்துடன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் கள்ளக்குறிச்சிக்கு விரைந்துள்ளார். வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில், இதுவரை கள்ளச்சாரயம் காச்சிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மு.க.ஸ்டாலின்

மேலும், கள்ளச்சாரயம் அருந்தி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ. 10 லட்சமும், சிகிச்சை பெற்று வருபவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.50 ஆயிரமும் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஓய்வுபெற்ற நீதிபதி கோகுல் தாஸ் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. விரிவான விசாரணை நடத்தி 3 மாதங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இருப்பினும் அரசு நிர்வாகம் மற்றும் காவல் துறையினரின் அலட்சியமே இத்தகைய மோசமான சம்பவத்திற்கு காராணம் என பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர். பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் இந்த சம்பவத்திற்கு தார்மீக பொறுப்பேற்று முதல்வர் ஸ்டாலின் பதவி விலக வேண்டுமென வலியுறுத்தி வருகின்றனர். இதனை வலியுறுத்தி பலரும் எக்ஸ்( X) பக்கத்தில் #Resign_Stalin என்கிற ஹேஷ்டேக்கில் பதிவிட்டு வருகின்றனர். இதனால் சமூக வலைதள பக்கங்களில் #Resign_Stalin என்கிற ஹேஷ்டேக் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது.,

 

MUST READ