அரசு பள்ளிகளில் காலை உணவு திட்டம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு
மதுரை மாவட்டத்தில் முதலமைச்சரின் காலை சிற்றுண்டி திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக 26 அரசு தொடக்கப் பள்ளிகளை சார்ந்த 3,185 குழந்தைகள் பயனடைந்து வந்தனர்.
தற்போது விரிவுபடுத்தப்பட்டுள்ள இத்திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் கூடுதலாக 21 அரசு தொடக்க பள்ளிகள் மற்றும் 26 நடுநிலை பள்ளிகள் என மொத்தம் 47 பள்ளிகளை சார்ந்த 5,517 குழந்தைகள் என மதுரை மாவட்டத்தில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் மொத்தம் 73 அரசு பள்ளிகளை சார்ந்த 8,702 குழந்தைகள் பயன் பெறுகின்றனர்.
இந்நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மதுரை நாராயணபுரம் தொடக்கப் பள்ளியில் காலை சிற்றுண்டி திட்டம் குறித்து திடீர் ஆய்வு மேற்கொண்டார்.மேலும் அந்த பள்ளியில் அருகிலேயே மற்ற ஐந்து பள்ளிகளுக்கு தயாராகும் காலை சிற்றுண்டி சமையல் கூடத்திற்கு நேரடியாக சென்று ஆய்வு செய்தார். அப்போது அங்கு வாங்கப்படக்கூடிய உணவு பொருட்கள் மற்றும் தயாரிக்கும் விதம் எத்தனை குழந்தைகளுக்கு உணவு தயார் செய்யப்படுகிறது. எத்தனை ஊழியர்கள் பணி புரிகிறார்கள் என்று மாநகராட்சி ஆணையரிடமும் சமையல் கூட பொறுப்பாளரிடம் கேட்டறிந்தார்.
காலை சிற்றுண்டி உரிய நேரத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் சிறிதும் காலதாமதம் ஏற்படக் கூடாது சரியான முறையில் உணவுகள் இருக்க வேண்டும் எனவும் ஆசிரியர்களிடம் அறிவுறுத்தினார். இதனைத் தொடர்ந்து நாராயணபுரம் பள்ளி குழந்தைகளுடன் அமர்ந்து சிற்றுண்டி சாப்பிட்டார். அவருடன் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அமர்ந்து உணவருந்தினார்.
சாப்பிடும் போது பள்ளி குழந்தைகளிடம் உணவு தரம் குறித்தும் சுகாதாரம் குறித்தும், பள்ளி ஆசிரியர்கள் குறித்தும் விவரித்துக் கொண்டே உணவு அருந்தினார். குழந்தைகளும் அவருடன் தங்கள் கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர். பின்னர் பள்ளி குழந்தைகள் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புகைப்படம் எடுத்து கொண்டனர்.