சர்வதேச விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கும் தமிழ்நாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை சார்பில் ரூ.16.70 லட்சத்திற்கான காசோலையை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள முகாம் இல்லத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், புது டெல்லியில் வரும் மார்ச் மாதம் 8ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை நடைபெறவிருக்கும் உலக பாரா தடகள கிராண்ட் ப்ரீ 2025 போட்டியில் பங்கேற்கவிருக்கும் 16 தமிழ்நாடு வீரர் – வீராங்கனைகளுக்கு செலவீன தொகையாக தலா ரூ.65 ஆயிரம் தொகையை வீரர்களுக்கு வழங்கினார். அதேபோல் கஜகஸ்தான் நாட்டில் வரும் பிப்ரவரி 14 முதல் 16ஆம் தேதி வரை உலக வாள்வீச்சு கூட்டமைப்பு (FIE) நடத்தும் ஜூனியர் உலக கோப்பை வாள்வீச்சு போட்டியில் பங்கேற்க உள்ள தமிழ்நாடு வீராங்கனை பிளெஸ்ஸிலா சங்மா, மற்றும் அரவிந்தன் ஆகியோருக்கு செலவீன தொகையாக தலா ரூ.3.15 லட்சம் என மொத்தம் ரூ. 16.70 லட்சத்திற்கான காசோலையை தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை நிதியிலிருந்து வழங்கினார்.
மேலும் லடாக் யூனியன் பிரதேசம் லே நகரத்தில் கடந்த மாதம் 24ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை நடைபெற்ற கேலோ இந்தியா குளிர்கால விளையாட்டு போட்டியில் பதக்கங்கள் வென்ற 5 தமிழ்நாடு வீரர் – வீராங்கனைகளை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சந்தித்து பாராட்டி, வாழ்த்து தெரிவித்தார். இப்போட்டியில் பங்கேற்ற 11 தமிழ்நாடு வீரர்- வீராங்கனைகளுக்கு ரூ.7.05 லட்சம் செலவீன தொகையாக தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை சார்பில் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.