ரூ.30 லட்சம் முறைகேடு- ஈரோடு மாநகராட்சி ஆணையர் மீது வழக்கு
அரசுக்கு ரூ.30 லட்சம் இழப்பு ஏற்படுத்தியதாக ஈரோடு மாநகராட்சி ஆணையர் சிவக்குமார் மீது 6 பிரிவுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
பல்லாவரம் நகராட்சி ஆணையராக இருந்தபோது சிவக்குமார், 11 பள்ளிகளில் கழிவறை சுத்தம் செய்வதற்கான ஒப்பந்தம் வழங்கியதில் அரசுக்கு ரூ.6.85 லட்சம் இழப்பு ஏற்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பிட்ட தனியார் நிறுவனத்துக்கு சாதகமாக விதிகளை மீறி டெண்டர் வழங்கியதாகவும் சிவக்குமார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் பல்லாவரம் நகராட்சி ஆணையராக இருந்தபோது விதியை மீறி கொசு ஒழிப்புக்கான ரூ.1.14 கோடிக்கான டெண்டரை குறிப்பிட்ட நிறுவனத்துக்கு வழங்கியதாகவும், பள்ளிகளை சுத்தம் செய்ய விதிகளை மீறி ரூ.1.10 லட்சம் நிதி வழங்கியதாகவும் சிவக்குமார் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
நேற்று ஈரோடு மாநகராட்சி ஆணையராக இருக்கும் சிவக்குமாரின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். பல்லாவரம் நகராட்சி ஆணையராக பணிபுரிந்த பொழுது முறை கேட்டில் ஈடுபட்டதாக எழுந்த புகார் தொடர்பாக சோதனை நடைபெற்றது குறிப்பிடதக்கது.