ஃபெஞ்சல் புயல் பாதிப்பு சீரமைப்புக்கு ரூ. 6,675 கோடி வழங்க பரிந்துரைக்க வேண்டும் என மத்தியக்குழுவிடம், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் ஃபெஞ்சல் புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்வதற்காக, உள்துறை இணைச் செயலாளர் ராஜேஷ் குப்தா தலைமையிலான 7 பேர் கொண்ட மத்திய குழுவினர் இன்று சென்னை வந்தனர். இக்குழுவினர், நாளை முதல் கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நேரில் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.
இந்த நிலையில், மத்திய குழுவினர் சென்னை தலைமை செயலகத்தில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனர். அப்போது, மத்திய குழுவிடம் ரூ.6,675 கோடி வழங்கிட வேண்டி முழு விவரங்கள் அடங்கிய கோரிக்கை மனுவினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்தார். அப்போது, தமிழ்நாட்டிற்கு தேவையான நிவாரணப் பணிகள், நிரந்தர மற்றும் தற்காலிக மறு சீரமைப்புப் பணிகளுக்காக நிதியினை பெற்றுத்தர விரைந்து பரிந்துரைத்திடுமாறும் வலியுறுத்தினார்