சேலம் ஆட்சியர் அலுவலகம் முன்பு இளம்பெண் ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே சாமியாம்பாளையம் பகுதியை சேர்ந்த ஜோசப் என்பவரது மகள் சகாயம் மிட்டில்லா(24 ). இன்று காலை சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த இவர், திடீரென கொசு மருந்தை எடுத்து குளிர்பானத்தில் கலந்து குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இளம் பெண்ணின் இந்தச் செயலைப் பார்த்து, அங்கு பாதுகாப்பில் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவரை தடுத்து நிறுத்திய போலீஸார், ஆம்புலன்சை வரவழைத்து அப்பெண்ணுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தனர். இதனிடையே அப்பெண்ணிடம் இருந்த கடிதம் ஒன்றையும் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டனர்.
சகாயம் மிட்டில்லா எழுதி வைத்திருந்த கடிதத்தில், தனக்கு திருமணம் நிச்சயம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நாளில் , சங்ககிரி பகுதியை சேர்ந்த பால் தேவ், மார்த்தா ரூபி, டேவிட் , பெஞ்சமின் , உள்ளிட்டோர் கஞ்சா விற்பனை செய்வதாக கூறி தன் தாய் மீது போலீசில் புகார் அளித்ததாகவும், அவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் நிச்சயதார்த்த நாளன்று போலீசாரும் என் தாயை அழைத்து விசாரணை நடத்தியதாகவும் தெரிவித்துள்ளார். அதன்பின்னர் கஞ்சா விற்றதாக கூறப்பட்ட புகாரில் உண்மையில்லை என தெரிந்ததும் தனது தாயை விடுவித்துவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு , தனது தாய் வழிபாட்டுக்காக தேவாலயத்துக்குச் செல்லும்போது மார்த்தா ருபியை கத்தியால் குத்தி தாக்கியதாக போலீசாரிடம் மீண்டும் பொய் புகார் அளித்திருப்பதாகவும், அதன்பேரில் சம்மன் அனுப்பி தனது தாயை போலீஸார் கைது செய்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இது குறித்து சம்பந்தப்பட்டவர்களிடம் கேட்டபோது, அப்படித்தான் செய்வேன் என்றும் உங்கள் குடும்பத்தை வாழ விட மாட்டேன் எனக் கூறி மிரட்டுவதாகவும், என்ன செய்வதென்றே தெரியவில்லை என்றும், தனது திருமணத்தை நிறுத்த வேண்டும் என்கிற நோக்கில் அவர்கள் செயல்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
மேலும், தனது எனது இறப்பிற்கு பால்தேவ், மார்த்தா ரூபி உள்ளிட்டோர் தான் முழு காரணம் என்றும், தங்கள் குடும்பத்தின் மீது முன்விரோதம் வைத்துக் கொண்டு இதுபோன்று செயலில் ஈடுபட்டு வருகின்றனர் என்றும் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். பெஞ்சமின் என்பவர் ரவுடி போல நடந்து கொண்டு பல குடும்பங்களை அழித்துள்ளார் எனவும், கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவு இருப்பதால் அவர்மீது போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் கூறியுள்ள மிட்டில்லா, தன் இறப்பிற்கு பிறகாவது அவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அந்தக் கடிதத்தில் தெரிவித்திருக்கிறார்.
கடிதம் குறித்து உண்மை விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சகாயம் மிட்டில்லா வலியுறுத்தியுள்ளார். சேலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ள அவரிடம் போலீசார், தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.