Homeசெய்திகள்தமிழ்நாடுசேலம் அரசு மருத்துவமனை - தரமான சிகிச்சை , நவீன உபகரணங்கள்

சேலம் அரசு மருத்துவமனை – தரமான சிகிச்சை , நவீன உபகரணங்கள்

-

- Advertisement -

சேலம் அரசு மருத்துவமனையில் உள்ள நவீன வசதிகளால் , நோய் தீர்க்க வரும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மாதாமாதம் ஒரு லட்சத்து 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புறநோயாளிகளும் , உள் நோயாளிகள் பிரிவில் சுமார் ஐம்பதாயிரம் பேர் தங்கி சிகிச்சை பெற்று செல்வதாகவும் மருத்துவமனை டீன் தகவல் பகிர்ந்துள்ளார்.

சேலம் அரசு மருத்துவமனை - தரமான சிகிச்சை , நவீன உபகரணங்கள்

அரசு மருத்துவமனை என்றாலே முகம் சுளித்து வந்த மக்கள் தற்போது அங்குள்ள நவீன வசதிகள் , மற்றும் அளிக்கும் தரமான சிகிச்சையால் அரசு மருத்துவமனையை நாடி வருவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக கொரோனா காலத்தில் அரசு மருத்துவமனை ஆற்றிய பங்கு மறக்க முடியாதது. அந்த சமயங்களில் தனியார் மருத்துவமனைகள் சிகிச்சை என்ற பெயரில் பணத்தை வாரி சுருட்டியது. சாதாரண நோய்க்கு சென்றாலும் தனியார் மருத்துவமனையில் 50 ஆயிரம் ரூபாய் முதல் ஒரு லட்ச ரூபாய் வரை செலவு ஆகும் என்ற நிலை தற்போது உருவாகியுள்ளதால் அரசு மருத்துவமனைகளில் கிடைக்கும் அற்புத சிகிச்சையை கண்டு மக்கள் வருகை அதிகரித்துள்ளது.

சேலம் அரசு மருத்துவமனையை பொறுத்தவரை இருதய பாதிப்புகளை துல்லியமாக கண்டறியும் கேத்லேப் கருவி, புற்றுநோய் பாதிப்பை கண்டறியும் பெட் சிட்டி ஸ்கேன், உணர் திறன் பூங்கா , கட்டண படுக்கை அறை உள்ளிட்ட பல்வேறு நவீன வசதிகள் செய்யப்பட்டுள்ளதால் நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் பணக்காரர்கள் கூட சேலம் அரசு மருத்துவமனையை நாடிவரும் நிலை உருவாகியுள்ளது. இதனால் இலவசமாக மாதாந்திர மருந்து வழங்கும் பகுதியில் நீண்ட வரிசையில் மக்கள் ஆர்வமோடு வந்து காத்திருந்து மருந்துகளை வாங்கி செல்வதை பார்க்க முடிகிறது.

இது குறித்து அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைப் பெற வந்த நோயாளிகளிடம் கேட்டபோது , சாதாரண சளி , காய்ச்சல் முதல் பிரசவம் மற்றும் அறுவை சிகிச்சைகளுக்காக தனியார் மருத்துவமனைகளுக்கு செல்லும் போது அங்கு லட்சக்கணக்கில் செலவாகிறது. அதேபோல் வாழ்நாள் நோய்களான சர்க்கரை , ரத்த அழுத்தம் உள்ளிட்ட நோய்களுக்கு மருந்து மாத்திரைகள் எடுத்துக் கொள்ளும் போது மாதம் தோறும் 2000 ரூபாய் முதல் 5000 ரூபாய் வரை செலவாகிறது. அந்த மாத்திரைகள், அரசு மருத்துவமனைகளில் இலவசமாக கிடைப்பதால் தங்களுக்கு மாதம் 2000 ரூபாய் முதல் 3000 ரூபாய் வரை செலவு மிச்சம் ஆகிறது.

குறிப்பாக முதியவர்களாகிய தங்களுக்கு தரமான மருந்துகள் அரசு மருத்துவமனையில் கிடைப்பதால் , பிள்ளைகளுக்கு எவ்வித சுமையையும் தராமல் வாழ்ந்து வருகிறோம். மேலும் மக்களைத் தேடி மருத்துவம் மூலம் முதியோர்களாகிய நாங்கள் இலவசமாக வீட்டிலேயே சிகிச்சை பெற்று வருகிறோம். எனவே இந்த அரசை பாராட்டியே வேண்டும் என்று உருக்கமாக தெரிவித்தனர்.

நல்ல சிகிச்சை, தரமான மருத்துவம் கிடைப்பதால் ஏழை எளிய மக்களாகிய தங்களுக்கு அரசு மருத்துவமனை மிகவும் உதவிகரமாக உள்ளது என்றும் பெருமிதம் தெரிவித்தனர். மருத்துவ சிகிச்சை, மற்றும் நோயாளிகள் வருகை குறித்து சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் டீன் தேவி மீனாள் கூறும்போது, சேலம் அரசு மருத்துவமனையை பொருத்தவரை தனியார் மருத்துவமனைகளை காட்டிலும் நவீன உபகரணங்கள் உள்ளன. இதனால் தரமான சிகிச்சை வழங்கப்படுகிறது.

இதன் காரணமாக சேலம் அரசு மருத்துவமனையை நாடி வரக்கூடிய நோயாளிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அரசு மருத்துவமனைக்கு சென்றால் பூரணமாக நோயை குணப்படுத்தி அனுப்புகிறார்கள் என்ற நம்பிக்கை பொதுமக்களிடம் வளர்ந்துள்ளது. குறிப்பாக கொரோனா பெருந்தொற்றிற்கு பிறகு அரசு மருத்துவமனைகள் மீது பொதுமக்களின் நம்பிக்கை உயர்ந்துள்ளது.

இன்று அனைத்து விதமான நோய்களுக்கும் மருந்து , மாத்திரைகள் மற்றும் பல கோடி ரூபாய் மதிப்பிலான அதிநவீன மருத்துவ உபகரணங்கள் அரசு வழங்கி உள்ளதால், நோயாளிகளின் எந்த விதமான நோய் பாதிப்புகளையும் துல்லியமாக கண்டறிந்து, உரிய சிகிச்சை அளிக்கப்படுகிறது. தனியார் கார்ப்பரேட் மருத்துவமனைகளை விட இங்கு சிறப்பான சிகிச்சை பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைகளில் உள்ள உயர்தர மருத்துவ சிகிச்சைகள் நம் அரசு மருத்துவமனையிலும் கிடைப்பதால் , நடுத்தர வர்க்க மக்களும் அரசு மருத்துவமனையை நாடி வருகின்றனர்.

சேலம் அரசு மருத்துவமனையை பொருத்தவரை கடந்த மாதம் மட்டும்
புறநோயாளிகளாக ஒரு லட்சத்து 13 ஆயிரம் பேரும், உள் நோயாளிகளாக 49 ஆயிரம் பேரும் சிகிச்சை பெற்றுள்ளனர். ஒவ்வொரு மாதமும் அரசு மருத்துவமனைகளுக்கு வரும் ஏழை எளிய, நடுத்தர நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து தான் வருகிறது. சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பல்வேறு துறைகளுடன் கூடிய சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக செயல்பட்டு வருவதால், இங்கு சேலம் மட்டுமின்றி தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், கள்ளக்குறிச்சி, ஈரோடு என பல்வேறு சுற்றுப்புற மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்களும் அதிக அளவில் இங்கு வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர் .

உள் நோயாளிகள் சிகிச்சை பெரும் வகையில் 1600 க்கும் மேற்பட்ட படுக்கை வசதிகள் உள்ளது என்றார். குறிப்பாக இங்கு அதிக அளவில் பிரசவங்கள் நடைபெறுகிறது. ஒவ்வொரு மாதமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பிரசவங்கள் சிறப்பாக நடைபெற்று, தாய்மார்கள் குழந்தைகளுடன் வீடு திரும்புகின்றனர். மகப்பேறு இறப்பை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுப்பதால் இறப்பு விகிதம் பெருமளவில் குறைந்துள்ளது , அதனையும் சரிப்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்த அவர், தனியார் மருத்துவமனைகளுக்கு சென்று , அவர்களால் கைவிடப்பட்டவர்களும் அரசு மருத்துவமனையை நாடி வருகின்றனர் , அதுபோன்றவர்களையும் ஆபத்தான நிலையில் இருந்து காப்பாற்றி அனுப்பி வருகிறோம் என்றார்.

குறிப்பாக இதய அறுவை சிகிச்சைகள் சேலம் அரசு மருத்துவமனையில் அதிக அளவில் நடைபெற்று வருவதாக கூறிய அரசு மருத்துவமனை இதய பிரிவு தலைவர்
டாக்டர். கண்ணன் கூறும்போது, ஆபத்தான மற்றும் மிகவும் சிக்கலான இருதய பாதிப்புகளுடன் வரும் நோயாளிகளுக்கு இங்கு சிறப்பான சிகிச்சை அளிக்கும் வகையில் இதய பாதிப்புகளை மிகத் துல்லியமாகக் கண்டறியும் வகையில் அதிநவீன கேத்லேப் வசதி உள்ளது , மேலும் கரோனரி ரத்தக் குழாய்களில் கொழுப்பு அடைப்பு , ரத்தம் உறைதல் , எந்த இடத்தில் , எவ்வளவு சதவீதம் அடைப்பு உள்ளது என்ற விவரங்களை துல்லியமாக அறிந்து கொள்ளும் வகையில் கருவிகள் உள்ளதால் நடுத்தர மக்களும் இங்கு வந்து அறுவை சிகிச்சை மேற்கொள்கின்றனர்.

சமீபத்தில் சேலத்தைச் சேர்ந்த பிரபல வழக்கறிஞர் ஒருவர், தனியார் மருத்துவமனைகளில் கைவிடப்பட்ட நிலையில் , சேலம் அரசு மருத்துவமனைக்கு வந்து சிறப்பான அறுவை சிகிச்சை மூலம் தற்போது குணமடைந்து சென்றுள்ளார். இது போன்ற அறுவை சிகிச்சையின் மூலம் ஒவ்வொருவருக்கும் தலா 2 லட்சம் ரூபாய் முதல் 8 லட்சம் ரூபாய் வரை செலவு மிச்சமாகிறது. இருதய பாதிப்பு என்றாலே தனியார் மருத்துவமனைகளில் இரண்டு லட்சம், நான்கு லட்சம் என லட்சக்கணக்கில் செலவாகும் நிலையில், சேலம் அரசு மருத்துவமனையில் அது முழுவதும் அரசு காப்பீடு திட்டத்தின் கீழ் இலவசமாக வழங்கப்படுகிறது. சிறப்பான சிகிச்சை காரணமாக அரசு மருத்துவமனைக்கு நடுத்தர மக்களும் , ஏன் சில பணக்காரர்களும் கூட நாடி வருகிறார்கள் என்றார்.

எனவே தரமான சிகிச்சை , நவீன உபகரணங்கள் , மருந்து மாத்திரைகள் இலவசம் போன்றவற்றால் தற்போது அதிக அளவில் நோயாளிகள் அரசு மருத்துவமனைக்கு நாடி வருகின்றனர் என்றால் அது மிகை ஆகாது.

MUST READ